

சிஎஸ்கேவுக்கு எதிராக சிலபல கேப்டன்சி தவறுகளை மோர்கன் செய்ததால் கேகேஆர் தோல்வியடைந்து பிளே ஆஃப் வாய்ப்பும் சிக்கலாகியுள்ளது.
கொல்கத்தா அணி இடையில் கேப்டன்சியை மாற்றியது ஆனால் அணியில் விளையாட்டில் மாற்றம் வரவில்லை மாறாக தோல்விதான் ஏற்பட்டு வருகிறது.
இயன் மோர்கனிடம் கேப்டன்சியைக் கொடுப்பதாகவும் அதன் மூலம் பேட்டிங்கை மேம்படுத்தப் போவதாகவும் தினேஷ் கார்த்திக் கூறினார், ஆனால் அவர் டவுன் ஆர்டரை ஸ்திரமின்றி வைத்திருப்பதன் மூலம் அவரது பேட்டிங்கையும் ஐபிஎல் கரியரையும் காலி செய்ய கொல்கத்தா நிர்வாகம் முடிவு கட்டிவிட்டது போல்தான் தெரிகிறது.
கேப்டன்சி மாற்றத்தை கம்பீர் கடுமையாக விமர்சித்தார், தினேஷ் கார்த்திக்கிற்கு இப்படி சோதனை கொடுக்கலாமா என்றும் பயிற்சியாளருக்கும் கேப்டனுக்கும் நெருக்கம் இருந்தால் நல்லது என்பதற்காக நடுவில் தொந்தரவு செய்து கார்த்திக்கை அழுத்தம் செய்யலாமா என்று கடுமையாகக் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் கம்பீர் கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “இது மனநிலையைக் காட்டுகிறது. பேட்டிங்கில் கவனம் செலுத்த கேப்டன்சியை துறந்தார். ஆனால் அதுவும் வேலை செய்யவில்லை. எனவே பொறுப்பு இருப்பது சில வேளைகளில் நமக்கு நன்மை பயக்கும்.
2014-ல் நான் மிக மோசமான ஒரு காலக்கட்டத்தில் இருந்தேன். தொடரின் தொடக்கத்தில் 3 டக்குகளை வரிசையாக அடித்தேன். அப்போது நான் மீண்டும் நல்ல பார்முக்குத் திரும்ப கேப்டன்ஷிப் தான் பெரிதும் உதவியது. இதை கார்த்திக் புரிந்திருக்க வேண்டும்.
ஏனெனில் நான் பேட்டிங் செய்யாத போது அணிக்கான உத்தி, என் கேப்டன்சியில் அணியை எப்படி வெற்றி பெறச் செய்வது போன்றவற்றைச் சிந்திப்பேன். கேப்டனாக இல்லாத போது உங்கள் பேட்டிங் பற்றி இன்னும் அதிகமாக யோசிப்பதில்தான் போய் முடியும்” இவ்வாறு கூறினார் கம்பீர்.