

விளையாட்டில் மரியாதைக்குரிய, மதிப்புக்குரிய ஆளுமையாக தோனியை ஐஐஎச்பி என்ற இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹியூமன் பிராண்ட்ஸ் தனது டியாரா ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் அரங்கில் கேப்டன் கூல் என்று பலராலும் விதந்தோதப்படுபவர் தோனி, வெளி உலகில் தன்னை நடத்திக் கொள்வதில் நயநாகரீக மனிதர்.
அதுவும் இந்திய சுதந்திர தினத்தன்று தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தது அவரது மதிப்பைக் கூட்டியது. ராணுவத்தில் கவுரவ சேவையாற்றியுள்ளார்.
கிரிக்கெட் களத்தில் கடும் சர்ச்சைகள் ஏற்படும்போதெல்லாம் தனது சமயோசித, நயநாகரீக அணுகுமுறைகளால் நட்பார்ந்த சூழலை உருவாக்கியவர் தோனி.
2007 உலகக்கோப்பையை வென்றவர் 2011 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபிகளை வென்றதோடு எண்ணற்ற இருதரப்பு தொடர்களில் இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றவர். ஐபிஎல் கிரிக்கெட்டில் உண்மையில் சாம்பியன் அணியாக திகழ்ந்து வந்தது, நடப்பு ஐபிஎல் 2020 தொடரில்தான் சொதப்பி வெளியேறியுள்ளது.
இந்நிலையில் விளையாட்டில் மரியாதைக்குரிய ஆளுமையாக தோனியை இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹியுமன் பிராண்ட்ஸ் அடையாளப்படுத்தியுள்ளது.
மாறாக காஃப் வித் கரன் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விதத்தில் தன் அந்தரங்க விளையாட்டுக்களையெல்லாம் வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா சர்ச்சைக்குரிய பிரபலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய தொலைக்காடி பிரபலங்களில் கோலி தேர்வு செய்யப்பட்டார். அதே போல் ரசிகர்களிடம் அதிக ஈர்ப்பைப் பெற்ற வீரர் என்பதிலும் கோலி உள்ளார். அதே போல் கோலி-அனுஷ்கா சர்மா ஜோடி சிறந்த கவர்ந்திழுக்கும் தம்பதியினராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.