Published : 26 May 2014 05:32 PM
Last Updated : 26 May 2014 05:32 PM

பந்து வீச்சாளர்களின் மனோநிலையை யூசுப் பத்தானுக்கு விளக்கிய வாசிம் அக்ரம்

ஐபிஎல். கிரிக்கெட்டில் அன்று ஈடன் கார்டன் ரசிகர்களை தனது அனாயாச அதிரடியினால் உற்சாகமூட்டி கொல்கத்தா அணியை 2வது இடத்திற்குக் கொண்டு சென்ற யூசுப் பத்தான், தனது அந்த ஆட்டத்திற்குக் காரணம் வாசிம் அக்ரமின் அறிவுரைகளே என்று கூறியுள்ளார்.

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக 15 பந்துகளில் அரைசதம் கண்ட யூசுப் பத்தான், 22 பந்துகளில் 72 ரன்களை விளாசினார். இதில் உலகின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னின் ஒரே ஓவரில் 26 ரன்கள் விளாசி அதிர்ச்சி அளித்தார் யூசுப்.

161 ரன்களை 92 பந்துகளில் எடுத்தால்தான் கொல்கத்தா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பின்னுக்குத் தள்ளி 2-வது இடம் பிடிக்கும் என்ற நிலை இருந்தது. அதனை நம்பமுடியாத வகையில் நிகழ்த்திக் காட்டினார் யூசுப் பத்தான்.

தனது இந்தப் பேட்டிங்கிற்குக் காரணம் அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளர் வாசிம் அக்ரம்தான் காரணம் என்று கூறினார் யூசுப் பத்தான்:

"வாசிம் அக்ரம் பெரும் அளவுக்கு எனக்கு ஊக்கமளித்தார், மேலும் அவரது அனைத்து அனுபவங்களையும் ஒன்று திரட்டி பவுலர்களின் மனோநிலை பற்றி எனக்கு வழங்கிய அறிவுரைகள் மிக முக்கியமானவை. அவரது அறிவுரைதான் என்னை இத்தகைய இன்னிங்ஸிற்குத் தயார் படுத்தியது" என்றார் யூசுப் பத்தான்.

கடந்த ஐபிஎல் போட்டித் தொடரில் யூசுப் பத்தான் ஆட்டம் சோபிக்கவில்லை. இந்த முறையும் அவர் தன் திறமைக்கேற்ப ஆடாவிட்டாலும் கொல்கத்தாவின் வெற்றியில் தனது பங்கை ஆற்றினார் என்றே கூறவேண்டும், கடைசியில் அசாத்தியமான இந்த இன்னிங்ஸை ஆடியுள்ளார் அவர்.

வாசிம் அக்ரம், யூசுப் பத்தான் ஆட்டம் பற்றிக் கூறியது வருமாறு:

"அவர் சோபிக்காமல் சோர்வடைந்து விட்டதாக நான் ஒருபோதும் கருதியதில்லை. அவருக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்காமல் இருந்தது. இதுபோன்று கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு காலக்கட்டத்தில் ஏற்படவே செய்யும்." என்றார்.

2011 உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு இந்திய அணியிலிருந்து அவர் தேவையில்லாமல் நீக்கப்பட்டதால் அவர் மனச்சோர்வு அடைந்ததாக 2012 ஐபிஎல் போட்டிகளின் போது வாசிம் அக்ரம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x