‘சிஎஸ்கேவின் தலைகீழான வீழ்ச்சிக்கு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்காததுதான் காரணம்’- பிரையன் லாரா விமர்சனம்

மே.இ.தீவுகள் முன்னாள் வீரர் பிரையன் லாரா : கோப்புப்படம்
மே.இ.தீவுகள் முன்னாள் வீரர் பிரையன் லாரா : கோப்புப்படம்
Updated on
2 min read

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலைமை தலைகீழாகப் போனதற்கும், தொடரிலிருந்து வெளியேறியதற்கும் இளம் வீரர்களுக்கு ஆதரவு அளிக்காமல், அனுபவ வீரர்கள், வயதான வீரர்கள் பக்கம் நின்றதுதான் காரணம். இனிவரும் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு அதிகமான வாய்ப்பளிக்க வேண்டும் என மே.இ.தீவுகள் ஜாம்பவான் பிரையன் லாரா வலியுறுத்தியுள்ளார்.

ஐபிஎல் சீசனில் 3 முறை சாம்பியன், 6 முறை 2-ம் இடத்துக்குச் சென்ற வெற்றிகரமான அணி எனக் கருதப்படும் சிஎஸ்கே அணி முதல் முறையாக இந்த சீசனில் ப்ளே ஆஃப் சுற்றைத் தாண்டாமல் வெளியேறியது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் அனுபவ வீரர்கள் முக்கியம் என்ற ரீதியில் வயதான வீரர்களுக்கு தொடர்ந்து கேப்டன் தோனி வாய்ப்பளித்ததால், டாடிஸ் ஆர்மி என்ற பெயரும் வைக்கப்பட்டது.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் திடீர் வீழ்ச்சிக்கான காரணம் குறித்து மே.இ.தீவுகள் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலின் "செலக்ட் டக்அவுட்" எனும் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

''சிஎஸ்கே அணியில் ஏராளமான வயதான, பழைய வீரர்கள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர்களால்தான் அணிக்குள் புதிய, இளம் வீரர்கள் வர முடியவி்ல்லை. அந்த அணியில் உள்ள வீரர்களைப் பாருங்கள். வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பலர் நீண்டகாலமாக இடம்பிடித்து வருகின்றனர்.

ஆகவே, சிஎஸ்கே அணி என்பது இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல், இளம் வீரர்களைச் சேர்க்காமல் அனுபவத்தின் பக்கமே நின்றுள்ளது. தொடர்ந்து அனுபவம், வயதான வீரர்கள் பக்கம் சிஎஸ்கே அணி நின்றதுதான் இந்த முறை மோசமான தோல்விக்குக் காரணம்.

சிஎஸ்கே அணிக்கு இந்த ஐபிஎல் சீசன் உண்மையில் நம்பமுடியாத சீசனாக இருக்கும். ஒவ்வொரு முறையும் சிஎஸ்கே அணி தொடருக்குள் வரும்போது, மிகவும் நம்பிக்கையுடன், ஏதாவது சாதிக்கும் வகையில் உற்சாகமாக வருவார்கள்.

தனது அணியைச் சிறப்பாகக் கொண்டு செல்ல தோனிக்கு இது சரியான நேரம் என நினைத்து வந்தோம். ஆனால், ஒவ்வொரு போட்டி முடியும்போதும் சிஎஸ்கே அணியின் செயல்பாடு கீழே சென்று கொண்டே இருந்தது. ஆனால், நம்பிக்கை மட்டுமே அவர்களிடம் இருந்தது.

ஆனால், இந்தச் சூழலைப் பயன்படுத்தி அடுத்த ஆண்டு சிறந்த அணியைக் கட்டமைக்க வேண்டும். அடுத்துவரும் சில போட்டிகளில் முழுமையாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அவர்களின் செயல்பாட்டைக் கவனிக்க வேண்டும்''.

இவ்வாறு லாரா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in