

ஆர்சிபி அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் அணியின் நேற்றைய போட்டியில் மும்பை அணியின் சூரியகுமார் யாதவ் 43 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 79 ரன்கள் விளாசி. 72/3 என்ற நிலையிலிருந்து அணியை தனி நபராக வெற்றிக்கு இட்டுச் சென்றார்.
இவரை இந்திய அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா, ஹர்பஜன் சிங், சஞ்சய் மஞ்சுரேக்கர் போன்றோர் கருத்து தெரிவித்துள்ள நிலையில் அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது பெரிய ஏமாற்றமாக அவருக்குள் இருக்கும் என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொலார்ட் தெரிவித்துள்ளார்.
மூன்று இளம் வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் அட்டகாசமாக ஆடிவருகின்றனர் ஒன்று தேவ்தத் படிக்கால், இவர் ஆர்சிபி அணிக்காக 417 ரன்களை எடுத்துள்ளார். அடுத்ததாக ஷுப்மன் கில் 378 ரன்களை எடுத்துள்ளார். சூரிய குமார் யாதவ் 362 ரன்களை எடுத்து அசத்தி வருகிறார். இதில் ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைத்தது, படிக்கால், சூரியகுமார் யாதவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. படிக்காலாவது இப்போதுதான் வந்திருக்கிறார் ஆனால் சூரிய குமார் யாதவ் 2-3 வருடங்களாகவே உள்நாட்டுத் தொடர்களில் பிரமாதமாக ஆடி இந்திய அணியின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொலார்ட் கூறியதாவது:
நாங்கள் ஒரு அணியாக ஒருங்கிணைந்து ஆடுகிறோம். பும்ரா தொடர் முழுதும் நிமிர்ந்து நிற்கிறார். 2 விக்கெட்டுகள் சடுதியில் விழுந்த பிறகும் சூரியகுமார் யாதவ் அந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவிக்கிறார் என்றால் கற்பனை செய்து பாருங்கள்.
உண்மையில் மனதுக்குள் அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து ஏமாற்றமாகவே உணர்வார். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவரது ஆட்டம் மேம்பட்டுக் கொண்டே வருகிறது.
சீரான முறையில் ஆடும் ஒருவருக்கு உரியதை அளிப்பதுதான் வழக்கம். ஆனால் காலம் கனியாமல் எதுவும் நடக்காது, என்று சூரியகுமார் யாதவுக்காக இரக்க உணர்வுடன் பரிந்து பேசினார் பொலார்ட்.