Published : 04 Oct 2015 12:42 PM
Last Updated : 04 Oct 2015 12:42 PM

16-வது ஓவர்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது: டுமினி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தர்மசாலாவில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. ரோகித்சர்மா 66 பந்தில் 106 ரன் விளாசினார்.

பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 19.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டுமினி 34 பந்தில் 68 ரன் (1 பவுண்டரி, 7 சிக்சர்) குவித் தார். டிவில்லியர்ஸ் 51, ஆம்லா 36, பெஹார்தின் 32 ரன் எடுத்தனர்.

இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கடைசி கட்டங்களில் சொதப்பியது. பேட்டிங்கின் போது 15.3 ஓவரில் இந்திய அணி 160 ரன்கள் எடுத்திருந்த போது கோக்லி ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளில் ரோகித் சர்மாவும் வெளியேறினார். இதன் பின்னர் டோனி 20(19) , ரெய்னா14(13), அக்சார் பட்டேல்2(6) ஆகியோர் சந்தித்த பந்துகளுக்கு நிகராக மட்டுமே ரன் சேர்த்தனர்.

இது இந்திய அணியின் ரன்விகிதத்தை கடைசி நேரத்தில் மந்தமாக்கியது. 199 ரன்கள் என்பது வலுவான இலக்காக இருந்தாலும் தென்னாப்பிரிக்க அணி எந்த இடத்திலும் பதற்றம் இல்லாமல் ஆடியது. 7.4 ஓவரில் 77 ரன்கள் குவித்து ஆம்லா- டிவில்லியர்ஸ் ஜோடி அடித்தளம் போட்டு கொடுத்தது. 15வது ஓவர் வரை ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் 16வது ஓவர் நிலைமையை தலை கீழாக மாற்றியது. அக்சார் பட்டேல் வீசிய அந்த ஓவரில் டுமினி 3 சிக்சர்கள் உட்பட 22 ரன் விளாசி னார். அடுத்த ஓவரில் டுமினி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தோனி, ரெய்னா ஆகியோர் வலுவாக அப்பீல் செய்த போதும் நடுவர் அவுட்டு கொடுக்க மறுத்து விட்டார்.

அதன் பின்னர் புவனேஷ்வர் குமார் வீசிய 19வது ஓவர் சோதனையாகவே அமைந்தது. இந்த ஓவரில் டுமினி தலா 1 சிக்சர், பவுண்டரிகளுடன் 14 ரன் சேர்த்தார். கடைசி ஓவரில் 10 ரன் தேவை என்ற நிலையில் ஸ்ரீநாத் அரவிந்த் 3வது பந்தை புல்டாசாக வீச அதை டும்னி சிக்சராக மாற்றினார். முடிவில் வெற்றியானது தென்னாப்பிரிக்க அணியின் கையில் தஞ்சம் புகுந்தது.

போட்டியின் முடிவு தொடர்பாக தோனி கூறும்போது, ஒரு சில முடிவுகள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை.நெருங்கி வந்து தான் தோல்வியை தழுவினோம். கடைசி கட்டத்தில் ஒரு சில ஓவர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது.

பந்து வீச்சாளர்கள் அதிகமான ரன்களை விட்டு கொடுத்து விட்டனர். ஒரு ஓவரில் 20 ரன்களுக்கு மேல் கொடுக்கும் பட்சத்தில் அடுத்து வரும் வீரர்களுக்கு கூடுதல் நெருக்கடி தான் ஏற்படும்" என்றார்.

தென்னாப்பிரிக்க கேப்டன் டுபெளஸிஸ் கூறும்போது, "இரு அணிகளும் 200 ரன்கள் வரை குவித்ததால் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு நல்ல விறுவிறுப்பாக இருந்தது. ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார். அவருக்கு ஏற்ற வகையில் எங்கள் அணியில் டுமினி அபாரமாக ஆடினார்" என்றார்.

ஆட்டநாயகன் விருது வெற்ற டுமினி கூறுகையில், "ரோகித் சர்மாவின் ஆட்டத்தை பார்த்த போது எங்களால் 200 ரன்களுக்கு மேல் வரை சென்றாலும் சேஸ் செய்யமுடியும் என்று கருதினேன். மிகப்பெரிய இலக்குக்கு தொடக்கம் சிறப்பாக இருக்க வேண்டும். எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்ததால் இலக்கை எட்ட முடிந்தது. நான் விளையாடிய ஆட்டங்களில் சிறந்த ஒன்றாகும். ஆட்டத்தின் போக்கை 16வது ஓவர் தான் மாற்றியது" என்றார்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கொண்ட தொடரில் தென்னாப்ரிக்கா 1 0 என்ற கணக் கில் முன்னிலையில் உள்ளது. 2 வது ஆட்டம் நாளை கட்டாக்கில் நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x