Published : 28 Oct 2020 11:47 AM
Last Updated : 28 Oct 2020 11:47 AM

சஹாவின் அதிரடி பேட்டிங் திறமைகளை எப்போதும் ஏன் குறைத்தே மதிப்பிட வேண்டும்?: சச்சின் டெண்டுல்கர் ஆதங்கம் 

விருத்திமான் சஹாவின் ஷாட் அடிக்கும் திறமையை ஏன் குறைத்து மதிப்பிட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட்டின் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று வலுவான டெல்லி கேப்பிடல்ஸ் பவுலிங்குக்கு எதிராக 45 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 87 ரன்களை விளாசினார் விருத்திமான் சஹா.

இவரை பொதுவாக டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்று கூறி ரிஷப் பந்த்தை பெரிதாகக் கூறுவார்கள், ஆனால் ரிஷப் பந்த் பந்துக்கு ஒரு ரன் எடுப்பதற்குக் கூட திணறுவதைப் பார்க்க வேண்டியுள்ளது.

சஹா, வார்னர் கூட்டணியினால் நேற்று 88 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி போல், சச்சின் டெண்டுல்கர் சஹாவின் ஹிட்டிங் திறமையை விதந்தோதியுள்ளார், “மிகவும் பிரமாதமான பேட்டிங். விருத்திமான் சஹாவின் அதிரடித் திறமைகள் ஏன் எப்போதும் குறைத்தே மதிப்பிடப்படுகிறது என்றே நானும் உணர்கிறேன்.

பந்து பிட்ச் ஆகும் இடம், திசை ஆகியவற்றைத் திறம்பட முன் கூட்டியே கணிக்கும் சஹா ஆடும் புதிய ஷாட்கள் ஆச்சரியமளித்தன, அதுவும் அவர் ஸ்லாக் செய்யவில்லை, அட்டகாசமாக ஆடினார், அவர் இன்னிங்ஸை நான் முழுதும் ரசித்துப் பார்த்தேன்” என்று சச்சின் டெண்டுல்கர் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறும்போது, “உலகின் சிறந்த விக்கெட் கீப்பரின் தனித்துவமான இன்னிங்ஸைப் பார்த்தேன்” என்று பாராட்டியுள்ளார்.

டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்று முத்திரைக்குத்தப்பட்ட சஹா 2014 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்காக கொல்கத்தாவுக்கு எதிராக இறுதியில் சதம் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x