

ஹாக்கி, கிரிக்கெட் போன்ற போட்டிகளில் மட்டுமின்றி, தடகளத்திலும் இந்தியர்களால் சாதிக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியவர் மில்கா சிங். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஓட்டப்பந்தயத்தில் 4 தங்கப் பதக்கங்களை வென்ற இவர், 1960-ம் ஆண்டு ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 4-வதாக வந்து நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை தவற விட்டார்.
விளையாட்டுப் போட்டிகளில் தனது சாதனைகளுக்கெல்லாம் மூல காரணம் தன் சகோதரி இஷார்தான் என்கிறார் மில்கா சிங். சிறுவயது முதலே மில்கா சிங்கின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்தவர் இஷார். ஒருமுறை டிக்கெட் எடுக்காமல் ரயிலில் சென்றதற்காக கைது செய்யப்பட்ட மில்கா சிங், திஹார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சமயத்தில் தன்னிடம் இருந்த ஒரே நகையை அடகுவைத்து, மில்கா சிங்கை சிறையில் இருந்து மீட்டுள்ளார் இஷார்.
பின்னாளில் தான் பங்கேற்ற போட்டி ஒன்றைக் காண இஷாரை அழைத்துச் சென்றுள்ளார் மில்கா சிங். போட்டியைத் தொடங்குவதற்கு அடையாளமாக நடுவர் துப்பாக்கியை எடுத்துச் சுட, ‘ஐயோ... என் தம்பியை சுட்டுட்டாங்களே!... என்று அலறியுள்ளார் இஷார். மைதானத்தில் இருந்தவர்களுக்கு இந்த சம்பவம் மிகப்பெரிய நகைச்சுவையாக இருந்துள்ளது. ஆனால், “கிராமத்தை விட்டு வெளியில் வராதவரான என் அக்காவின் செயல் மற்றவர்களுக்கு நகைச்சுவையாக இருக்கலாம். ஆனால் என் மீது அவர் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடாகத்தான் அதைப் பார்க்கிறேன்” என்று இந்த சம்பவத்தைப் பற்றி நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் மில்கா சிங்.