

பரோடாவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி தனது முதல் இன்னிங்ஸில் 57.4 ஓவர்களில் 125 ரன்களுக்கு சுருண்டது.
2015-16 சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நேற்று தொடங்கியது. சென்னையில் நேற்று தொடங்கிய ஆட்டத்தில் பரோடாவை எதிர்கொண்டது தமிழகம். டாஸ் வென்று முதலில் பேட் செய்த தமிழக அணியில் கேப்டன் அபினவ் முகுந்த் டக் அவுட்டானார்.
இதையடுத்து பாரத் சங்கருடன் இணைந்தார் பாபா அபராஜித். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தது. சங்கர் 28 ரன்களில் ஆட்டமிழக்க, தமிழகத்தின் சரிவு தவிர்க்க முடியாததானது. பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் 1, துணை கேப்டன் இந்திரஜித் 14, அபராஜித் 44, கவுஷிக் 1 என அடுத்தடுத்து வெளியேறினர்.
பின்வரிசையில் பிரசன்னா மட்டுமே 21 ரன்கள் எடுத்தார். எஞ்சிய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் 57.4 ஓவர்களில் 125 ரன்களுக்கு சுருண்டது தமிழகம். பரோடா தரப்பில் பார்கவ் பட், யூசுப் பதான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இதையடுத்து முதல் இன் னிங்ஸை ஆடிய பரோடா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப் புக்கு 33 ரன்கள் எடுத்துள்ளது. தேவ்தார் 17, கேப்டன் வாஹ்மோட் 4 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.