

கொழும்பில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை 200 ரன்களுக்கும், மேற் கிந்தியத் தீவுகள் 163 ரன்களுக் கும் சுருண்டது.
37 ரன்கள் முன்னிலை யுடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை 75.3 ஓவர்களில் 206 ரன்களில் ஆல்அவுட் ஆனது. 244 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மேற்கிந்தியத் தீவுகள் பேட் செய்தது. 4-வது நாள் ஆட்டம் முற்றிலும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், 5-வது நாளான நேற்று 1 விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் என்ற நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடர்ந்து ஆடியது.
ஸ்கோர் 80 ஆக இருந்த போது ஷாய் ஹோப் (35) அவுட் ஆனார். அவர் களத்தில் இருந்தவரை மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் ஆட்டமிழந்ததால் மேற்கிந்தியத் தீவுகளின் சரிவு தவிர்க்க முடியாததானது. பின்னர் வந்த சாமுவேல்ஸ் 6, பிளாக்வுட் 4, ராம்தின் 10, சிறிது நேம் போராடிய டேரன் பிராவோ 61, கெமர் ரோச் 13 ரன்களில் வெளியேறினர். எஞ்சிய வீரர்கள் விரைவாக அவுட் ஆக 65.5 ஓவர்களில் 171 ரன்களுக்கு சுருண்டது மேற்கிந்தியத் தீவுகள்.
இதனால் 72 ரன்கள் வித்தியாசத்தல் இலங்கை வெற்றி பெற்றது. ஹெராத் 4, வர்த்தனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 6 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றிருந்ததால் 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என கைப்பற்றியது.