Published : 26 Oct 2020 06:40 PM
Last Updated : 26 Oct 2020 06:40 PM

வார்னரால் ஜோப்ரா ஆர்ச்சரை ஒன்றும் செய்ய முடியாது.. பிஞ்ச் ஏறிவருவது தற்காப்புக்குத்தான்: சச்சின் டெண்டுல்கரின் நுட்பமான அலசல்

இங்கிலாந்தின் இளம் வேகப்புயல் தனது வேகம், ஸ்விங், பவுன்ஸ் மூலம் எல்லா வீரர்களையும் இந்த ஐபிஎல் தொடரில் ஆட்டிப்படைத்து வருகிறார். குறிப்பாக சன் ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர், ஐபிஎல் தொடர் என்றில்லை, அனைத்து வடிவங்களிலும் ஜோப்ரா ஆர்ச்சரிடம் காலியாகி கொண்டிருக்கிறார்.

ஒரு பவுலரிடம் தொடர்ந்து அவுட் ஆனால் கிரிக்கெட்டில் அவர்களை bunny என்று கேலியாக அழைக்கப்படுவதுண்டு, அப்பேர்ப்பட்ட செல்லப்பிள்ளையாகி விட்டார் ஆர்ச்சருக்கு வார்னர்.

மொத்தம் 7 இன்னிங்ஸ்களில் டேவிட் வார்னர், ஜாப்ரா ஆர்ச்சரின் 45 பந்துகளில் 32 ரன்கள் எடுத்துள்ளார். 6 முறை அவுட், இது அனைத்து வடிவங்களிலும் இந்த ஆண்டு டேவிட் வார்னர், ஜோப்ரா ஆர்ச்சருக்கு எதிராக எடுத்த ஸ்கோர்களாகும்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் வெகுவாகப் புகழ்ந்து ஆர்ச்சர் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார், அதில் சச்சின் கூறியதாவது:

ஆர்ச்சர் பேட்ஸ்மென்களை நல்ல வேகத்தில் வீசி எடுக்கிறார். அதுவும் நல்ல பவுன்ஸ், ஸ்விங்குடன் அவர் வீசும் போது ஒன்றும் செய்ய முடியாது. குறிப்பாக வார்னருக்கு அவர் மிடில் ஸ்டம்பில் வீசி பந்தை எகிறச் செய்து குறுக்காக வெளியே ஸ்விங் செய்கிறார், இதனால் அவர் வார்னருக்கு கட் ஆடவோ, புல் ஷாட் ஆடவோ இடம் கொடுப்பதில்லை.

வார்னரை ஆர்ச்சர் என்ன செய்கிறார் என்றால் தன் உடலை விட்டு விலகி மட்டையைக் கொண்டு செல்லுமாறு செய்கிறார் அதில்தான் வார்னர் அவுட் ஆகிறார், ஆனால் ஒன்றும் செய்ய முடியாது, ஆர்ச்சரின் வேகம், லெந்த், ஸ்விங், பவுன்ஸ் அப்படி.

மேலும் ஸ்டம்ப் லைனில் இருப்பதால் கட் செய்ய முடியாது, லைனில் இருப்பதால் புல் ஷாட்டும் ஆட முடியாது. வார்னரால் முன்னால் வந்தும் ஆட முடியாது. வார்னருடனான மோதலில் ஜோப்ரா ஆர்ச்சர் மெதுவாக வென்று வருகிறார், ஆனால் உறுதியாக வெல்கிறார். மறந்து விட வேண்டாம் அவர் 148-150 கிமீ வேகம் வீசுகிறார்.

அதே போல் அவரை மேலே இறங்கி ஆடுவதற்கும் ஆர்ச்சர் அனுமதிப்பதில்லை. பிஞ்ச் அவ்வாறு செய்வதைப் பார்க்கிறோம், ஒன்று இரண்டு அடிகள் இறங்கி வருகிறார் பிஞ்ச் ஆனால் இது ஏதோ ஆர்ச்சர் பந்துகளை அடிப்பதற்காக அல்ல, பிஞ்சுக்கு தன் ஆஃப் ஸ்டம்ப் எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை. அவர் இறங்கி வந்தாலும் ஆர்ச்சரை அது அடிப்பதற்காக இல்லை தன் விக்கெட்டைப் பாதுகாத்துக் கொள்ளவே என்றே நான் உறுதியாக நம்புகிறேன், இவ்வாறு நுட்பமாக அலசியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x