

அபுதாபியில் நடந்த ஐபிஎல் போட்டியில் நேற்று 195 ரன்கள் என்ற பெரிய இலக்கை எட்டிய மும்பை இந்தியன்ஸுக்கு பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் தங்களின் 150+ கூட்டணி மூலம் அதிர்ச்சியளித்து வெற்றி பெற்றனர்.
இதன் மூலம் ராஜஸ்தான் பிளே ஆஃப் வாய்ப்பு கொஞ்சம் அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஆட்டங்களில் 10 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 11 ஆட்டங்களில் 14 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. மும்பை, டெல்லி, பெங்களூரு மூன்று அணிகளும் 14 புள்ளிகள் பெற்றிருந்தாலும் நிகர ரன் விகிதத்தில் மும்பை முதலிடம் பிடித்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய வெற்றிக்குப் பிறகு ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:
உண்மையில் மிக மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காகத்தானே.. இந்த வெற்றிக்காகத்தானே கதறினோம். எங்களின் 2 அனுபவ வீரர்கள் கடைசி வரை கொண்டு சென்றனர், அதுவும் அவர்கள் ஆடிய விதம் மிக்க மகிழ்வளிக்கிறது.
பிட்ச் நன்றாக இருந்தது, பந்துகள் நன்றாக மட்டைக்கு வந்தன. ஸ்டோக்ஸ் தீவிரத்துடன் தான் இறங்கினார். அது முதல் பந்திலிருந்தே தெரிந்தது. சஞ்சு, ஸ்டோக்ஸ் இருவருமே நல்ல கிரிக்கெட் ஷாட்களை ஆடினர். ரன் ரேட்டை கச்சிதமாக வைத்திருந்தனர்.
மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தினோம், ஆனால் கேட்ச் விட்டது அதிக ரன்களுக்கு வழிவகுத்து விட்டது. ஹர்திக்கிடமிருந்து கிரேட் ஹிட்டிங். எங்கள் பேட்டிங் வரிசை இந்த வெற்றி மூலம் உத்வேகத்தை அடுத்த 2 போட்டிகளுக்கும் கடத்துவார்கள் என்று நம்புகிறேன்.
அனுபவ பேட்ஸ்மென்கள் வெற்றி பெறும் ஸ்கோர்களை எடுக்காமல் இருந்தனர், இந்தப் போட்டி மூலம் அது நடந்துள்ளது, இது தொடர வேண்டும் என்று விரும்புகிறோம்.
இவ்வாறு கூறினார் ஸ்டீவ் ஸ்மித்.