

நேற்று அபுதாபியில் நடந்த ஐபிஎல் 2020-ன் 45வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்த 196 ரன்கள் வெற்றி இலக்கை பென் ஸ்டோக்ஸ் தனது 60 பந்து 107 ரன்களால் ஊதித்தள்ளினார். 18.2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றி பெற அதன் பிளே ஆஃப் வாய்ப்பும் பிரகாசமடைந்ததோடு சிஎஸ்கே வெளியேற்றமும் நீக்கமற உறுதி செய்யப்பட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா பொங்கி எழுந்தார். சூரியகுமார் யாதவ் (40), இஷான் கிஷன் (37), சவுரவ் திவாரி (34) ஆகியோருக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா 21 பந்துகளில் 2 பவுண்டரி 7 சிக்சருடன் 60ரன்கள் விளாச 13 ஒவர்கள் முடிவில் 101/6 என்று இருந்த மும்பை 7 ஓவர்களில் 94 ரன்களை விளாசி 195 ரன்களை எட்டியது. ஹர்திக் பாண்டியாவுக்கு நிறைய புல்டாஸ்கள் தானமாக வழங்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் திடீரென இப்படி ஆவேசம் கொள்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர் 107 ரன்களை எடுக்க, அவருக்கு உறுதுணையாக சஞ்சு சாம்சன் 31 பந்துகளில் 4பவுண்டரி 3 சிக்சர்கள் என 54 ரன்கள் விளாசித்தள்ள போல்ட், பேட்டின்சன், பும்ரா, ராகுல் சாஹர் அடங்கிய மும்பை பவுலிங் நிலைகுலைந்து 18.2 ஒவர்களில் சரணடைந்தது. 196/2 என்று ராஜஸ்தான் வெல்ல, ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் இருவரும் சேர்ந்து 14 ஓவர்களில் 152 ரன்களைச் சேர்த்து பெரிய கூட்டணி அமைத்தனர்.
இந்நிலையில் ஆட்ட நாயகன் விருது பெற்ற பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது:
ஒருவகையில் கசப்பினிமை, இனியகசப்பு. அணிக்காக இந்த மாதிரி இன்னிங்ஸை ஆட நீண்ட காலம் பிடிக்கிறது. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற மற்ற ஆட்டங்களின் முடிவை நம்பியிருக்காமல் இருக்கும் சூழ்நிலையில் 2-3 ஆட்டங்களுக்கு முன்பே நான் பார்முக்கு வந்திருக்க வேண்டும்.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய அவசியமிருந்தது, எனவே இது நல்ல வெற்றி. மற்ற போட்டிகளை விட இதில் தன்னம்பிக்கையுடன் இறங்கினேன்.
களத்தில் சிறிது நேரம் செலவிட்டு வெற்றியுடன் திரும்பியது அருமை. ஷார்ட் ஆக இருந்தாலும் ஃபுல் ஆக இருந்தாலும் பந்து அருமையாக பேட்டுக்கு வந்தது. பந்து பிட்சில் நின்று வந்தால் கடினம்தான், ஆனால் அப்படி வரவில்லை.
எந்த பவுலராக இருந்தாலும் பும்ராவாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அவர்கள் வீச வரும்போது அவர்களை நெருக்கடிக்குள் தள்ளும் நல்ல நிலையில் இருந்தோம். பல கடினமான சூழ்நிலைகளுக்கு இடையே என் குடும்பத்தாருக்கும் இந்தச் சதம் மகிழ்ச்சியளித்திருக்கும். இங்கிலாந்து ரசிகர்களுக்கு பல கடினங்களுக்கு இடையில் இந்த இன்னிங்ஸ் மகிழ்ச்சி கொடுத்திருக்கலாம், என்றார் பென் ஸ்டோக்ஸ்.