ஐபிஎல் 2020: ப்ளே ஆஃப் சுற்றுக்கான தேதி, இடங்கள் அறிவிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

ஐபிஎல் டி20 தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெறும் தேதிகள், இடங்கள் குறித்து இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நேற்று அறிவித்துள்ளது.

13-வது சீசன் ஐபிஎல் டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் ஏறக்குறைய லீக் ஆட்டங்கள் முடியும் நிலையில் இருக்கின்றன.

தொடரில் இடம் பெற்றுள்ள 8 அணிகளுக்கும் இன்னும் அதிகபட்சமாக 3 போட்டிகள் வரை மட்டுமே இருப்பதால், அடுத்த சில நாட்களில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும் அணிகளின் விவரம் தெரிந்துவிடும்.

ஆனால், ஐபிஎல் தொடர் தொடங்கியபோது, லீக் சுற்றுகளின் தேதிகள், இடங்களை மட்டுமே அறிவித்திருந்த ஐபிஎல் நிர்வாகம், ப்ளே ஆஃப் சுற்றுக்கான தேதி, இடங்களை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் பிசிசிஐ நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடக்கும் இடங்கள், தேதிகளை அறிவித்துள்ளது.

இதன்படி, ப்ளே ஆஃப் சுற்றில் முதல் தகுதிச் சுற்று ஆட்டம் நவம்பர் 5-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இதில் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் இரு இடங்களைப் பெற்ற அணிகள் மோதும். எலிமினேட்டர் ஆட்டம் நவம்பர் 6-ம் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதில் 3-வது மற்றும் 4-வது இடம் பெற்ற அணிகள் மோதுகின்றன.

நவம்பர் 8-ம் தேதி அபுதாபியில் நடக்கும் 2-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில், முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் தோற்ற அணியும், எலிமினேட்டர் சுற்றில் வென்ற அணியும் மோதுகின்றன.

நவம்பர் 10-ம் தேதி துபாயில் இறுதிப்போட்டி நடக்கிறது. இதில் முதல் தகுதிச்சுற்றில் வென்ற அணியும், 2-வது தகுதிச்சுற்றில் வென்ற அணியும் மோதுகின்றன. போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகின்றன.

மகளிருக்கான டி20 சேலஞ்ச் போட்டி நவம்பர் 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகள் ஏற்கெனவே துபாய் வந்து சேர்ந்துவிட்டனர். தற்போது 6 நாள் தனிமையில் இருந்து வருகின்றனர்.

இதில் மகளிருக்கான டி20 போட்டியின் இறுதி ஆட்டம் நவம்பர் 9-ம் தேதி நடக்கிறது. இதில் சூப்பர்நோவாஸ், வெலோசிட்டி, ட்ரெயல் ப்ளேஸர்ஸ் ஆகிய 3 அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மட்டுமே மோதுகின்றன.

நவம்பர் 4-ம் தேதி சூப்பர்நோவாஸ்- வெலோசிட்டி அணிகளுக்கும், 5-ம் தேதி வெலோசிட்டி-ட்ரெயல் ப்ளேஸர்ஸ் அணிகளுக்கும், 7-ம் தேதி ட்ரெயல் ப்ளேஸர்ஸ்-சூப்பர்நோவாஸ் அணிகளுக்கும் இடையே போட்டி நடக்கிறது. 9-ம் தேதி இறுதி ஆட்டம் நடக்கிறது.

இவ்வாறு பிசிசிஐ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in