

சுனில் நரைன் பாவம்! ஒவ்வொரு டி20 தொடரிலும் ‘த்ரோ’ பிரச்சினையில் சிக்குகிறார். ஏதோ காரணம் கூறி அவரை முடக்கும் முயற்சி நடந்து வருகிறது.
இந்த ஐபிஎல் தொடரிலும் அவர் பவுலிங் மீது சந்தேகம் எழுப்பப்பட்டது, இதனையடுத்து ஓரிரு போட்டிகள் அவர் உட்கார வைக்கப்பட்டார். பிறகு மீண்டும் அணிக்குத் திரும்பிய அவர் நேற்று 32 பந்துகளில் 64 ரன்கள் விளாசி 7.2 ஓவர்களில் 44/3 என்று திணறிய கொல்கத்தாவை இவர் நிதிஷ் ராணாவுடன் சேர்ந்து 115 ரன்கள் கூட்டணி அமைத்து ஸ்கோரை 194 ரன்களுக்கு உயர்த்தினார்.
இதனால் கொலகத்தா அணி வலுவான டெல்லி அணிக்கு ஒரு அதிர்ச்சித் தோல்வியை அளித்தது. சிஎஸ்கே கண்களுக்குப் படாத தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
இந்நிலையில் இயன் மோர்கன் இறங்க வேண்டிய இடத்தில் சுனில் நரைனை இறக்கி விட்ட பெருமை பயிற்சியாளர் மெக்கல்லமையே சாரும் என்று கொல்கத்தாவின் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
ஆனால் இருவரும் சேர்ந்து தினேஷ் கார்த்திக்கை பின்னால் இறக்காமல் முன்னால் இறக்கி அவரது பேட்டிங்கைக் காலி செய்து வருவதோடு, ஐபிஎல் கிரிக்கெட் கரியரையும் முடித்து வைத்து விடுவார்கள் போலிருக்கிறது.கேப்டன்சி மாற்றத்திலும் மோர்கனுக்கு வழிவிட தினேஷ் கார்த்திக் நிர்பந்திக்கப்பட காரணம் மெக்கல்லம், மோர்கன் நெருக்கமே என்று கிரிக்கெட் வட்டாரங்களில் சலசலக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று வெற்றிக்குப் பிறகு கேப்டன் மோர்கன் கூறியதாவது:
சிந்திப்பதற்கு திட்டம் வகுப்பதற்கு 2 நாட்கள் அவகாசம் உள்ளன. நெருக்கமான இந்தத் தொடரில் போட்டிகளுக்கிடையே அகப்பட்டு கொண்டு விடும் தருணம் நிறையவே உண்டு. சுனில் நரைன் திரும்பி வந்து ஆல்ரவுண்டராக ஆடியது கிரேட். நிதிஷும் அவரும் அனைத்து ரன்களையும் எடுத்தனர்.
சுனில் நரைனை முன்னால் அனுப்பியது எல்லாம் பயிற்சியாளர் மெக்கல்லமின் முடிவு. அவர் தன் உத்திகளை அமல்படுத்த விரும்புகிறார். அனைத்துமே பிரெண்டன் தான்.
என்றார் மோர்கன்.