

கடந்த 2015-ம் ஆண்டில் நான் கிரிக்கெட்டுக்கு வரும் முன் நான் என்னுடைய தேவைக்குகூட என்னால் சம்பாதிக்க முடியாத சூழலில்தான் இருந்தேன். அதன்பின்புதான் கிரிக்கெட்டை தேர்வு செய்தேன் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான வருண் சக்ரவர்த்தி தெரிவித்தார்.
அபு தாபியில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் வலிமை வாய்ந்த டெல்லி கேபிடல்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. 195 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே சேர்த்து 59 ரன்களில் தோல்வி அடைந்தது.
கொல்கத்தா அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய இலக்கை வகுத்துக் கொடுத்த சுனில் நரைன், நிதிஷ் ராணா பேட்டிங்கில் காரணம் என்றால், பந்துவீச்சில் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த தமிழக வீரர் வருண் சக்ரவர்த்திதான் காரணம்.
பந்துவீச்சில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி மாயாஜாலம் செய்துவிட்டார். 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 5 முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
தனது கட்டுக்கோப்பான சுழற்பந்துவீச்சால் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ள வருண், டெல்லி அணியின் பேட்ஸ்மேன்களைத் திணறவிட்டார்.95 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த டெல்லி அணி, அடுத்த 40 ரன்களைச் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. இதற்கு முக்கியக் காரணம் வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சாகும்.
இந்தப் போட்டி முடிந்த பின் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவுக்கு அளித்தப் பேட்டியில், “ நான் கட்டிடக் கலை வல்லுநருக்காகப் படித்தேன். ஆனால் அந்தப் படிப்பை வைத்து என் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் அளவுக்குகூட என்னால் சம்பாதிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு எனக்கு பணப்பிரச்சினை இருந்தது. 2015-ம் ஆண்டுவரை என் நிலைமை பணப்பிரச்சினையோடுதான் இருந்தேன்
அதன்பின்வேறு வழியில்லாமல்தான் நான் கிரி்க்கெட் பக்கம் கவனத்தைத் திருப்பினேன். கடந்த சில போட்டிகளாக நான் விக்கெட் எடுக்கமுடியாமல் மன உளைச்சலி்ல் இருந்தேன். இன்றைய ஆட்டத்தில் ஒன்று அல்லது 2 விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என்று எண்ணியபோது, எனக்கு 5 விக்கெட்டுகள் கிடைத்தது நினைத்தது கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
அதிலும் ஸ்ரேயாஸ் அய்யர் விக்கெட்டை நான் வீழ்த்தியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நான் ஷார்ட் பவுண்டரி அடிக்கும் வகையில் ஸ்டெம்ப்புக்கு அளவாகப் பந்துவீசினேன் அது அவரின் விக்கெட்டைச் சாய்த்தது.
இந்த நேரத்தில் நான் எனது அம்மா ஹேமா மாலினி, அப்பா வினோத் சக்ரவர்த்தி, நான் திருமணம் செய்துகொள்ளப் போகும் நேகா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். இவர்கள் எல்லாம் என் மனதுக்கு தெம்பு அளித்தவர்கள்.
கடந்த 2015-ல் என்னால் பணம் சம்பாதிக்க முடியாமல் இருந்தபோது இவர்கள்தான் எனக்கு ஊக்கம் அளித்தனர். ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று எண்ணி கிரிக்கெட் பக்கம் எனது வாழ்க்கையைத் திருப்பினேன்”எனத் தெரிவித்தார்.
மேலும், வருண்சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதை ட்விட்டரில் ஹர்பஜன் சிங், வருண் ஆரோன், வர்ணணையாளர் ஹர்ஸா போக்ளே, ஆகாஷ் சோப்ரா ஆகியோரும் பாராட்டியுள்ளனர்.
சென்னையில் செயின்ட் பாட்ரிக் பள்ளியில் படித்த வருண் சக்ரவர்த்தி, சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது தீவிரமான ஆர்வமாக இருந்தவர். ஆனால், என்ன தமிழ்நாடு கிரிக்கெட் அகாடெமியில் இவருக்கு பலகாரணங்களால் இடம் கிடைக்கவில்லை. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் வருண் என்பதால், படிப்புதான் பிரதானம் என்பதால், தொடர்ந்து படிக்கத் தொடங்கினார்.
வருண் நன்றாக ஓவியம் வரைவார் என்பதால், கட்டிடக்கலை வல்லுநர் படிப்பில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து முடித்தார். படித்து முடித்தபின் சரியான வேலைகிடைக்காமல் கிடைக்கும் வேலை செய்துவந்தநிலையில்தான் கிரிக்ெகட் விளையாட்டுக்கு முழுமையாகத்திரும்பினார்.
அதன்பின் டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் வருண் சக்ரவர்த்தி மதுரை பேந்தர்ஸ் அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டபோதுதான் அவரின்திறமை அனைவராலும் அறியப்பட்டது. குறிப்பாக வருண் சக்ரவர்த்தியின் சுழற்பந்துவீச்சைப் பார்த்து தினேஷ் கார்த்திக், அஸ்வின் வியந்தார்கள். அதன்பின் வருண் சக்ரவர்த்தி கிரிக்கெட்டின் படிகளில் உயரே செல்வதற்கு அடுத்தடுத்துபலர் உதவினார்கள்.