

30 வயதேயான உ.பி. வீரரும் உ.கோப்பை வின்னருமான, யு-19 முன்னாள் கேப்டனுமான தன்மய் ஸ்ரீவஸ்தவா அனைத்துக் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக விரக்தியில் அறிவித்துள்ளார்.
இடது கை தொடக்க வீரரான இவர், 90 முதல்தரப் போட்டிகளில் ஆடிய தன்மய் ஸ்ரீவஸ்தவா 4,918 ரன்கள் எடுத்தார். பெரும்பாலும் உ.பி. அணிக்கு ஆடியுள்ளார், கேப்டன்சியும் செய்துள்ளார்.
2019-20 சீசனில் உத்தராகண்ட் மாநிலத்துக்குச் சென்றார். ஆனால் வரும் சீசனில் இவர் பெயர் உத்தேச அணியில் இல்லை. இதனையடுத்து அவர் கூறும்போது, “நான் உத்தராகண்டுக்கு ஆடப்போவதில்லை. அணியுடன் உடனடியான எதிர்காலம் இல்லை. ஐபிஎல் தொடரிலும் ஆடவில்லை. இந்தியாவுக்கு ஆடப்போவதில்லை என்பதும் எனக்குத் தெரியும் இன்னும் 10 போட்டிகள் ஆடினார்ல் 100 என்ற இலக்கத்தை எட்டலாம் ஆனால் அதனால் என்ன பயன்? என்ன சாதித்து விட முடியும்?
எதுவும் மாறப்போவதில்லை, எதற்காக இன்னொரு இளைஞரின் இடத்தை நான் மறிக்க வேண்டும். சரியான நேரத்தில் வாய்ப்பு கிடைக்கும் ஒரு வீரர் ஆடுவதுதான் சரி.” என்றார்.
16வயது வீரராக இவரது கரியர் அருமையாகத் தொடங்கியது. இந்தியா யு-19 அணியை கேப்டன்சி செய்துள்ளார்.அதில் விராட் கோலி, மணீஷ் பாண்டே, ஜடேஜா போன்ற வீரர்கள் இருந்தனர். அவர் கேப்டன்சியை கோலியிடம் இழந்தார். யு-19 உலகக்கோப்பை, 2008-ல் மலேசியாவில் நடந்த போது தன்மய் ஸ்ரீவஸ்தவா அதிக ரன்களை எடுத்த சாதனையைப் புரிந்தார்.
முதல் 2 ஐபிஎல் தொடர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்தார். அதன் பிறகு ஐபிஎல் ராடாரிலிருந்து மறைந்தார்.
இந்நிலையில் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் இவர் ஓய்வு பெற்றுள்ளது கிரிக்கெட் அரங்கில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.