

இந்திய அணியின் ஆஸ்திரேலிய தொடருக்கான போட்டி அட்டவணையில் இன்னமும் சிக்கல்கள் நீடிப்பது தொடரில் இந்திய அணிக்குத்தான் சாதக பலன்களை அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் ஆஸ்திரேலியாவை எச்சரித்துள்ளார்.
ஈஎஸ்பிஎன் - கிரிக் இன்போ இணையத்தில் இயன் சாப்பல் எழுதிய பத்தியில் கூறியுள்ளதாவது:
கரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன. இந்த நிலையில் இந்திய வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது, ‘குழப்பத்தினூடே இந்திய அணி பயணித்து அதிலேயே நீடிக்கும் பழக்கமுடையவர்கள், ஆனால் ஆஸ்திரேலியர்களை குழப்பம் நிலைதடுமாறச் செய்யும்’ என்றார்.
ஹர்ஷா இந்த எச்சரிக்கையை 2008-ல் இந்தியா இங்கு வந்த போது, சிட்னி டெஸ்ட், ‘மன்க்கி கேட்’ விவகாரத்தின் போது ஏற்பட்ட குழப்பத்தை முன் வைத்துக் கூறினார். அவர் சொன்னதுதான் அப்போது நடந்தது, இந்திய அணி குழப்பத்தில் பயணித்து சிட்னிக்கு அடுத்த வேகப்பந்து வீச்சு மைதானத்தில் பெர்த் டெஸ்ட்டை வென்றனர், எதிரணியினரின் வலையில் ஆஸ்திரேலியர்கள் விழுந்தனர்.
பொதுவாக இந்தியாவுக்கு பயணிக்கும் போது எதிரணியினருக்கு இத்தகைய நெருக்கடி ஏற்படும். ஆனால் குழப்பத்தில் இந்திய அணி நீடித்து இருந்து ஆடும் பழக்கம் உடையவர்கள் என்பதே நம் பார்வை.
கடந்த முறை இங்கு தொடரை வென்றது போல் இந்திய அணி வெல்ல வேண்டுமெனில் உள்நாட்டு பிட்ச்களில் பிரமாதமாக வீசும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சை விராட் கோலி எப்படி முன்னின்று வீரராக எதிர்கொண்டு அந்த தைரியத்தை மற்றவர்களுக்கு எப்படிக் கடத்துகிறார் என்பதைப் பொறுத்து உள்ளது.
கடந்த தொடரில் புஜாரா உறுதியுடன் ஆஸி பந்து வீச்சை எதிர்த்து நின்றார், அவர்களைக் களைப்படையச் செய்து மற்ற வீரர்கள் ஆடுவதற்கு வழிவகை செய்தார். கடந்த முறை இந்தியப் பந்து வீச்சு சாதாரணத்துக்கும் அதிக அளவில் பிரமாதமாக ஆச்சரியப்படுத்தியது, இம்முறை ஸ்மித், வார்னர், நட்சத்திரமான லபுஷேன் ஆகியோர் உள்ளனர்.
கடந்த முறை இந்திய அணி அடிலெய்டில் வெற்றியுடன் தொடங்கினர். இந்த முறை பகலிரவு டெஸ்ட், இதில் ஆஸ்திரேலியாவுக்கு அனுபவம் அதிகம். எனவே சூழ்ந்திருக்கும் கணிக்க முடியாத் தன்மையில் இந்த முறை ‘குழப்பத்தில் ஆடும் ராஜாக்கள்’ வெற்றி பெறுவார்களா என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளது, என்று இயன் சாப்பல் ஆர்வத்தைத் தூண்டியுள்ளார்.