Published : 24 Oct 2020 01:15 PM
Last Updated : 24 Oct 2020 01:15 PM

எப்படி மீளப்போகிறார்கள்? இளம் வீரர்களை நினைத்து தோனி மனரீதியாக மிகவும் சோர்ந்துள்ளார்: 'முதியோர் கிளப்' எனக் கிண்டலடித்துவிட்டு சேவாக் ஆதரவு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டமிழந்து வெளியேறிய தோனி: படம் உதவி | ட்விட்டர்.

புதுடெல்லி

ஐபிஎல் டி20 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் இளம் வீரர்கள் செயல்பட்ட விதத்தை நினைத்து தோனி மனரீதியாக மிகவும் சோர்ந்துள்ளார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்தது. 115 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்தத் தோல்வியால் சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டு, முதல் முறையாக ஐபிஎல் வரலாற்றில் ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் வெளியேறுகிறது.

இளம் வீரர்களுக்குத் தோனி வாய்ப்பளிக்க மறுக்கிறார் எனும் குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்த நிலையில், இந்தப் போட்டியில் இளம் வீரர்கள் தமிழக வீரர் நாராயண் ஜெகதீஸன், ருதுராஜ் கெய்க்வாட் இருவருக்கும் தோனி வாய்ப்பளித்தார். ஆனால், இருவருமே ஏமாற்றினர். இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று தோனி பேசியதற்கு ஏற்ப இருவருமே டக் அவுட்டில் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

இந்தத் தோல்வியால் துவண்டு கிடக்கும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சேவாக் ஆதரவு அளித்துள்ளார். இணையதளம் ஒன்றுக்கு சேவாக் அளித்த பேட்டியில், “மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அடைந்த தோல்வி நீண்ட காலத்துக்கு அவர்களைப் பாதிக்கும்.

இந்தத் தோல்வி சிஎஸ்கே அணியைவிட தோனியை மனரீதியாக மிகவும் பாதித்துள்ளது. தோனி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தார். மீண்டும் அவர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இளம் வீரர்கள் இருவரும் சிறிதளவு ஸ்கோர் செய்திருந்தால், போட்டி சிறிது சுவாரஸ்யம் மிகுந்ததாக இருந்திருக்கும்.

இளம் வீரர்கள் பொறுப்புடன் பேட் செய்திருந்தால், சிஎஸ்கே அணியின் ஸ்கோர் 140 முதல் 150 ரன்களை எட்டியிருக்கும். தோனியும் அவர்களின் திறமையைக் கண்டு சிறிது மனநிறைவு அடைந்திருப்பார்.

ஆனால், தன்னை மிகவும் தலைக்குனிவுக்கு ஆளாக்கிய இளம் வீரர்களை நினைத்து தோனி மிகவும் வேதனைப்படுகிறார். இந்தத் தோல்வியிலுருந்து சிஎஸ்கே அணி எவ்வாறு மீண்டு வரப்போகிறது என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சிஎஸ்கே அணிக்கும், மும்பை அணிக்கும் இடையிலான போட்டி தொடங்கும் முன், சேவாக் இன்ஸ்டாகிராமில் சிஎஸ்கே அணியைகிண்டல் செய்திருந்தார். அதில், “ஐபிஎல் தொடரில் இரு எதிரி அணிகள் இன்று மோதுகின்றன. சிஎஸ்கே அணி மும்பையைத் தோற்கடித்துள்ளது. ஆனால், இப்போது வரை சிஎஸ்கே அணி வெற்றி பெறும் முனைப்பு குறைந்து முதியோர் கிளப் போன்று இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x