

குத்துச்சண்டை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் முகமது அலி. தான் பங்கேற்ற 61 குத்துச் சண்டை போட்டிகளில் 56 முறை வெற்றிகளைக் குவித்த முகமது அலி, இந்த அளவுக்கு உயர முக்கிய காரணம் சிறுவயதில் அவரது சைக்கிள் திருடுபோனதுதான்.
முகமது அலியின் இயற்பெயர் காஸியஸ் மார்செலஸ் கிளே. தனது 12-வது வயது வரை சண்டை என்றால் என்னவென்றே தெரியாத அமைதியான ஒரு சிறுவனாகத்தான் காஸியஸ் கிளே இருந்துள்ளார். அந்த வயதில் கிளேவுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்றாக அவரது சைக்கிள் இருந்துள்ளது. ஓய்வு நேரங்களில் தனக்கு பிடித்தமான சைக்கிளில் ஊர் சுற்றுவது அவரது வழக்கமாக இருந்துள்ளது. இந்த சூழலில் ஒரு நாள் கிளேவின் சைக்கிள் திருடுபோனது.
சிறுவனான கிளேவால் இதை தாங்க முடியவில்லை. இந்தச் சூழலில்தான் தனது குடியிருப்பில் ஜோ மார்டின் என்ற போலீஸ்காரர் வசிப்பது அவருக்கு தெரியவந்தது. அவரிடம் சென்ற கிளே, தனது சைக்கிளைத் திருடியவனை கண்டுபிடித்து தருமாறு கேட்டுள்ளார். அவனை கண்டுபிடித்தால் என்ன செய்வாய் என்று ஜோ மார்டின் கேட்க, கன்னத்தில் ஓங்கி அறைவேன் என்று கிளே கூறியுள்ளார்.
‘‘திருடனை அடிக்க வேண்டுமானால் முதலில் உன் உடலை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். நீ விரும்பினால் என்னுடைய குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் சேரலாம்” என்று கூறி அழைத்துச் சென்ற ஜோ மார்டின், அவருக்கு பயிற்சி அளிக்க தொடங்கினார். அவருக்கும் குத்துச்சண்டையில் ஆர்வம் பிறந்தது. தொடர்ந்து பயிற்சி பெற்றவர் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். பின்னாளில் கிளேவுக்கு சைக்கிள் கிடைத்ததா என்று தெரியவில்லை. ஆனால் தொலைந்துபோன சைக்கிளால் கிளே உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரராக பிரபலமானார்.