மென்டோஸா அபாரம்; மும்பையை பந்தாடியது சென்னை

மென்டோஸா அபாரம்; மும்பையை பந்தாடியது சென்னை
Updated on
1 min read

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணியைத் தோற்கடித்தது.

நவி மும்பையில் நடந்த இந்த ஆட்டத்தில் மும்பை அணியில் 6 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கோல் கீப்பர் சுப்ரதா பால் உள் ளிட்ட 6 பேர் புதிதாக இடம்பெற்ற னர். அந்த அணி 4-3-3 என்ற பார்மட்டிலும், சென்னை அணி 4-3-1-2 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் 30 யார்ட் தூரத்தில் இருந்து சென்னை ஸ்டிரைக்கர் மென்டோஸா மிகத்துல்லியமாக கோல் கம்பத்தை நோக்கி பந்தை உதைத்தார். அதிவேகத்தில் சென்ற அந்த ஷாட்டை மிக அற்புதமாக முறியடித்தார் மும்பை கோல் கீப்பர் சுப்ரதா பால். இதையடுத்து சென்னை அணிக்கு கார்னர் கிக் வாய்ப்பு கிடைக்க, ஹர்மான்ஜோத் கபாரா பந்தை வெளியில் அடித்து வாய்ப்பை வீணடித்தார்.

24-வது நிமிடத்தில் மென்டோஸா கடத்திய பந்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சென்னை கேப்டன் இலானோ, அதை தாய் சிங்குக்கு கிராஸ் செய்தார். ஆனால் அவர் பந்தை கோல் கம்பத்துக்கு மேலே அடித்து வீணடித்தார்.

42-வது நிமிடத்தில் மும்பை ஸ்டிரைக்கர் பிரெட்ரிக்கிடம் பந்து செல்ல, அவர் அதை மற்றொரு ஸ்டிரைக்கரான நோர்டேவுக்கு பாஸ் செய்தார். பந்தை எடுத்துக் கொண்டு வேகமாக முன்னேறிய நோர்டே, கோல் கம்பத்தின் அருகில் சென்று வேகமாக உதைத்தபோது சென்னையின் வலது பின்கள வீரர் வாடூ, மிக அழகாக தனது காலை வைத்து பந்தை வெளியே திருப்பி கோலை முறியடித்தார். இதையடுத்து மும்பை அணிக்கு கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பை சென்னை கோல் கீப்பர் இடெல் தகர்க்க, முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் மும்பை வீரர்களிடம் இருந்து பந்தை பறித்த சென்னை கேப்டன் இலானோ, மிக வேகமாக பெனால்டி பாக்ஸுக்கு முன்னேறினார். அப்போது இடைமறித்த மும்பை கோல் கீப்பர் மற்றும் பின்கள வீரர்களை வீழ்த்திய இலானோ, வலது புறத்தில் வந்த ஸ்டிரைக்கர் மென்டோஸாவிடம் பந்தை கொடுக்க, அவர் எளிதாக கோலடித்தார்.

இதனால் உத்வேகம் பெற்ற சென்னை 66-வது நிமிடத்தில் 2-வது கோலை அடித்தது. ஸ்டிரைக்கர் ஜெயேஷ் ரானே, பந்தை கோல் கம்பத்தை நோக்கி உதைக்க, அது கோல் கம்பத்தின் மேல்புற கம்பியில் பட்டு வெளியேறியது. அப்போது வேகமாக முன்னோக்கி பாய்ந்த மென்டோஸா, தலையால் முட்டி கோலடித்தார். இதன்பிறகு மும்பை அணி கடுமையாகப் போராடியபோதும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் சென்னை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

இன்றைய ஆட்டம்: புனே-கொல்கத்தா

இடம்: புனே நேரம்: இரவு 7

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in