இந்தியஅணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் : கோப்புப்படம்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் : கோப்புப்படம்
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பின் தலைவர் அசோக் மல்ஹோத்ரா கூறுகையில் “ கபில் தேவ்வுக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தற்போது கபில் தேவ் உடல்நலனில் பிரச்சினையில்லை. கபில்தேவின் மனைவி ரோமியுடன் சிறிது நேரத்துக்கு முன்புதான் பேசினேன் ” எனத் தெரிவித்தார்.

ஆனால், கிரிக்கெட் வட்டாரங்களில் கிடைத்த தகவலின்படி, முன்னாள் வீரர் கபில் தேவுக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை கபில் தேவ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையும் உறுதி செய்துள்ளது.

ஃபோர்டிஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பில் " கபில் தேவுக்கு நள்ளிரவு ஒரு மணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து ஃபோர்டிஸ் இதய சிறப்பு மருத்துவமனையில் ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவர் அடுல் மாத்தூர் தலைமையிலான குழுவினர் கண்காணிப்பில் கபில் தேவ் ஐசியு பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்" என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு முதன்முதலில் கடந்த 1983-ல் உலகக்கோப்பையை பெற்றுக்கொடுத்த கேப்டன் கபில் தேவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானவுடன் சமூக வலைத்தளத்தில் அவருக்கான பிரார்த்தனைகளும், விரைவாக குணமடைய வாழ்த்துகளும் குவியத் தொடங்கிவிட்டன. ஷிகர் தவண், மதன்லால் , அனில் கும்ப்ளே, சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்கள் கபில் தேவ் விரைவாக குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான கபில் தேவ் 131 டெஸ்ட் போட்டிகளிலும், 5131 ரன்களையும், 225 ஒருநாள் போட்டிகளில் 3,783 ரன்களையும்குவித்துள்ளார். ஒரு நாள் போட்டியில் 253 விக்கெட்டுகளையும், டெஸ்ட் போட்டியில் 434 விக்கெட்டுகளையும் கபில்தேவ் வீவ்த்தியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட்டுகளையும், 5 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் எனும் பெருமை கபில் தேவுக்கு மட்டுேம உண்டு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in