Published : 23 Oct 2020 02:34 PM
Last Updated : 23 Oct 2020 02:34 PM

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக சிஎஸ்கே: கேதார் ஜாதவ்வுக்குப் பதில் நாராயண் ஜெகதீசன்?

ஐபிஎல் 2020 முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது, ஆனால் அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் நிலைமையும், சிஎஸ்கே நிலைமையும் தலைகீழாக மாறிப்போனது.

சிஎஸ்கேவின் அந்த வெற்றி தொலைதூர நினைவாகிப்போனது. பொய்யாய் பழங்கதையாகிப் போனது. இந்நிலையில் பிளே ஆஃப் வாய்ப்பு ஏற்கக்குறைய பறிபோன நிலையில் சிஎஸ்கே அணி, தொடர் வெற்றிகளைக் கண்டு வரும் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது.

9 போட்டிகளில் சிஎஸ்கே 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. மற்ற அணிகளெல்லாம் வீரர்களை புதிது புதிதாகக் களமிறக்கி வெற்றி காணும் நிலையில் ‘இளம் வீரர்களிடம் நாங்கள் பெரிய ஸ்பார்க்கைக் காணவில்லை’ என்று தோனி பேசி கடும் சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் ஆளானார். மூத்தோரிடம் இல்லாத ஸ்பார்க் பற்றி பேசாமல் வாய்ப்பு கொடுக்காமலே இளையோரின் ஸ்பார்க் இன்மை பற்றி அவர்கள் மனதில் கூடுவிட்டு கூடு பாய்ந்தது போல் தோனி கூறியது இன்னும் கூட விவாதத்திலும் விமர்சனத்திலும் இருந்து வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி ஜேம்ஸ் பேட்டின்சனை தூக்கி விட்டு நேதன் கூல்ட்டர் நைல் என்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரைக் களமிறக்கி ‘சக்ஸஸ்’ பார்த்தது, கோலி, சிராஜை களமிறக்கி சக்ஸஸ் கண்டார்.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் இன்று களமிறக்கும் உத்தேச 11 இப்படியிருக்கலாம்:

ரோஹித் சர்மா, டி காக், சூரிய குமார் யாதவ், இஷான் கிஷன், பொலார்ட், ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, நேதன் கூல்ட்டர் நைல், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட்/பேட்டின்சன், ஜஸ்பிரித் பும்ரா.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நாராயண் ஜெகதீசன் அறிமுகப் போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக நன்றாகவே ஆடினார், ஆனால் அதிர்ச்சிகரமாக அதன் பிறகு அணியில் இல்லை. மாறாக கேதார் ஜாதவ் மீது அவ்வளவு விமர்சனங்கள் இருந்தும் தொடர்ந்து நீடித்தார்.

இந்நிலையில் டிவைன் பிராவோ காயத்துடன் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது, ‘ட்ரிங்க்ஸ் சுமப்பவராக’ மாற்றப்பட்ட தென் ஆப்பிரிக்க ‘கிளாஸ்’ லெக் ஸ்பின்னருக்கு மறைமுக நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. அதே போல் ஜோஷ் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக லுங்கி இங்கிடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம்.

சிஎஸ்கே உத்தேச லெவன் இப்படியிருக்கலாம்: சாம் கரன், டுபிளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, என்.ஜெகதீசன், தோனி, ஜடேஜா, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், இம்ரான் தாஹிர், பியுஷ் சாவ்லா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x