Published : 03 Oct 2015 07:46 AM
Last Updated : 03 Oct 2015 07:46 AM

ரோஹித் சதம்; இந்தியா 199 ரன்கள் குவிப்பு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ரோஹித் சர்மா 66 பந்துகளில் 5 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் குவித்தார்.

தர்மசாலாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் அரவிந்த் நாத் அறிமுக வீரராக களம் கண்டார். 2-வது சுழற்பந்து வீச்சாளராக அக் ஷர் படேல் இடம்பெற்றார். டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து பேட் செய்த இந்திய அணியில் ரோஹித் சர்மா பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார். இந்தியா 3.1 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்திருந்தபோது ஷிகர் தவன் 3 ரன்களில் ரன் அவுட்டானார். இதையடுத்து ரோஹித் சர்மாவுடன் இணைந்தார் கோலி. மறுமுனையில் வேகம் காட்டிய ரோஹித், கிறிஸ் மோரிஸ் வீசிய 6 மற்றும் 8-வது ஓவர்களில் தலா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாசினார்.

தொடர்ந்து வேகமாக ஆடிய ரோஹித், கைல் அபாட் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து 39 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதனால் 10 ஓவர்களில் 86 ரன்களை எட்டியது இந்தியா. இம்ரான் தாஹிர் வீசிய 12-வது ஓவரில் ரோஹித் சர்மா ஒரு சிக்ஸரை விளாச, அதே ஓவரில் கோலி இரு சிக்ஸர்களை விரட்டினார்.

ரபாடா வீசிய 13-வது ஓவரில் இரு சிக்ஸர்களை விரட்டிய ரோஹித், மோரிஸ் வீசிய அடுத்த ஓவரில் இரு பவுண்டரிகளை பறக்கவிட்டார். இதனால் 14 ஓவர்களில் 140 ரன்களை எட்டியது இந்தியா. டி லாஞ்சி வீசிய அடுத்த ஓவரை எதிர்கொண்ட ரோஹித் சர்மா, அடுத்தடுத்து ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசி, 62 பந்துகளில் சதத்தை எட்டினார்.

இதன்மூலம் சர்வதேச டி20 போட்டியில் முதல் சதத்தைப் பதிவு செய்தார். சர்வதேச டி20 போட்டியில் சதமடித்த 2-வது இந்தியர் ரோஹித் ஆவார். முதல் வீரர் ரெய்னா. அவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவே சதமடித்துள்ளார்.

கைல் அபாட் வீசிய அடுத்த ஓவரில் கோலி 43 ரன்களில் (27 பந்துகளில்) ஆட்டமிழக்க, அதே ஓவரின் கடைசிப் பந்தில் ரோஹித் சர்மா 106 ரன்களில் வீழ்ந்தார். இதையடுத்து சுரேஷ் ரெய்னாவும், கேப்டன் தோனியும் ஜோடி சேர்ந்தனர். சிக்ஸர் அடித்து ரன் கணக்கைத் தொடங்கிய ரெய்னா 8 பந்துகளில் 14 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பின்னர் வந்த அம்பட்டி ராயுடு ரன் கணக்கைத் தொடங்காமலேயே ரன் அவுட்டானார். ஆட்டத்தின் கடைசிப் பந்தில் தோனி சிக்ஸரை விளாச, 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது இந்தியா. தோனி 12 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 20, அக் ஷர் படேல் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் கைல் அபாட் 4 ஓவர்களில் 29 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

விராட் கோலி 1000

நேற்றைய ஆட்டத்தில் 27 ரன்கள் எடுத்தபோது சர்வதேச டி20 போட்டியில் 1000 ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றார் விராட் கோலி. இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமை கோலி வசமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x