விளையாட்டாய் சில கதைகள்: தந்தைக்கு கொடுத்த வாக்கு

விளையாட்டாய் சில கதைகள்: தந்தைக்கு கொடுத்த வாக்கு
Updated on
1 min read

கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெஸ்ஸி, நெய்மர் என்று கால்பந்து உலகில் இப்போது ஏராளமான ஹீரோக்கள் இருக்கலாம். ஆனால் கடந்த நூற்றாண்டின் கால்பந்து ஹீரோ பீலேதான். கிரிக்கெட்டுக்கு பிராட்மேன் எப்படியோ, அப்படித்தான் கால்பந்து உலகின் பிதாமகனாக பீலே கருதப்படுகிறார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்து சக்ரவர்த்தியான பீலே, முதல்தர போட்டிகளில் அடித்த கோல்களின் எண்ணிக்கை 1,282. கால்பந்து உலகை கோல்மழையால் நனையவைத்த பீலேவின் பிறந்தநாள் இன்று (23-10-1940).

பீலேவைப் போலவே அவரது தந்தை டான் டின்ஹோவும் ஒரு கால்பந்து வீரர்தான். பிரேசில் நாட்டில் பல கிளப்புகளுக்காக ஆடியுள்ள அவர், தனது மகனும் தன்னைப் போலவே ஒரு கால்பந்து வீரனாக உருவெடுக்க வேண்டும் என்று விரும்பி, அவருக்கு பயிற்சி கொடுத்தார். ஒரு போட்டியில் ஆடும்போது டின்ஹோவின் கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் வேலைக்குகூட செல்லமுடியாத நிலை வர, பீலேவின் குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டது.

தங்கள் குடும்பம் கஷ்டப்படுவதற்கே கால்பந்துதான் காரணம் என்று கருதிய பீலேவின் தாயார், அவர் கால்பந்து ஆடுவதற்கு தடை விதித்தார். ஆனால் அதையும் மீறி தந்தை கொடுத்த உற்சாகத்தால் கால்பந்து விளையாட்டை தொடர்ந்தார் பீலே. 1950-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் உருகுவே அணியிடம் பிரேசில் தோற்றபோது, பீலேவின் தந்தை கதறி அழுதுள்ளார். அப்போது அவரைத் தேற்றிய பீலே, “கவலைப்படாதீர்கள் அப்பா... நான் பெரியவனானதும் பிரேசிலுக்கு உலகக் கோப்பையை வாங்கித் தருவேன்” என்று கூறியுள்ளார்.

தந்தைக்கு கொடுத்த வாக்குப்படியே 1958, 1962 மற்றும் 1970 ஆண்டுகளில் பிரேசிலுக்கு உலகக் கோப்பையை பெற்றுக்கொடுத்தார் பீலே. உலகக் கோப்பை போட்டிகளில் பிரேசிலுக்காக அவர் அடித்த கோல்களின் எண்ணிக்கை 12.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in