Last Updated : 22 Oct, 2020 05:27 PM

 

Published : 22 Oct 2020 05:27 PM
Last Updated : 22 Oct 2020 05:27 PM

டூப்பிளசிஸ் ‘கூல்டிரிங்ஸ்’ கொண்டு சென்றபோது மனசு வலித்தது; வேதனையாக இருந்தது: சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹிர் உருக்கம்

சிஎஸ்கே அணி வீரர் இம்ரான் தாஹிர் : கோப்புப்படம்

துபாய்

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டூப்பிளசிஸ் சிஎஸ்கே அணிக்காக கூல்டிரிங்ஸ் கொண்டு சென்ற காட்சியைப் பார்த்தபோது மனசு வலித்தது. வேதனையாக இருந்தது என்று சிஎஸ்கே அணி வீரர் இம்ரான் தாஹிர் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியில் மிகவும் ரசிக்கத்தக்க வீரர் இம்ரான் தாஹிர். ஒரு விக்கெட் வீழ்த்தினாலும் மைதானத்தையே ஒரு ரவுண்டு வந்து ரசிகர்களிடம் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வார். பராசக்தி எக்ஸ்பிரஸ் என்று அடைமொழியோடு இம்ரான் தாஹிர் அன்புடன் அழைக்கப்படுகிறார்.

கடந்த 2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் கேப் வென்ற இம்ரான் தாஹிரை, இந்த சீசனில் ஒருமுறை கூட சிஎஸ்கே அணி இதுவரை களமிறக்கவில்லை. இன்னும் 4 போட்டிகள் மட்டுமே சிஎஸ்கே அணிக்கு இருக்கும் நிலையில் தாஹிர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் தனக்கு இடம் கிடைப்பது குறித்து எந்த அறிகுறியும் தெரியவில்லை என்று தாஹிர் வருத்தம் தெரிவித்துள்ளார்

நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 3 ஆட்டங்களில் வெற்றியும், 7 ஆட்டங்களில் தோல்வியும் அடைந்து 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. அடுத்துவரும் 4 ஆட்டங்களையும் சிஎஸ்கே அணி வென்றால், ப்ளே-ஆஃப் சுற்றுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

இந்நிலையில் அஸ்வின் நடத்தும் 'ஹலோ துபை' நிகழ்ச்சியில் சிஎஸ்கே சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''என் ஆழ்மனதிலிருந்து சொல்கிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் சிறந்த அணி. உலகம் முழுவதும் சென்று கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். சுற்றி இருக்கிறேன். ஆனால், எனக்கு சிஎஸ்கே அணியில் கிடைத்த மரியாதை போன்று எந்த அணி நிர்வாகமும் அளித்தது இல்லை. என் குடும்பத்துக்குப் பின் என் மீது இவ்வளவு நெருக்கமாக இருப்பவர்களை நான் ஒருபோதும் பார்த்தது இல்லை.

அதிலும் குறிப்பாக சென்னை ரசிகர்கள் நம்பமுடியாத அளவுக்கு அணி மீது அன்பையும், பாசத்தையும் பொழிகிறார்கள். நான் இங்கே வித்தியாசமான சூழலில் விளையாடுகிறேன். அதற்கு முக்கியக் காரணம் இந்தக் கலாச்சாரத்தை விரும்புகிறேன்.

சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை வீரர் எப்படி விளையாடுகிறார் என்பதைப் பற்றிப் பேசமாட்டார்கள். எப்போதும் வீரர்களுக்கு ஆதரவாகவே இருப்பார்கள். இதைத்தான் நான் கிரிக்கெட்டில் விரும்புகிறேன். ஒருநாள் உனக்கான நாளாக மாறும், மற்றொரு நாள் அதுபோன்று இருக்காது என்பதைத் தெரிந்து வைத்துள்ளனர்.

நான் இந்த சீசனில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் விளையாடுவேனா என்பது குறித்த எந்த அறிகுறியும் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை.

எங்கள் அணியின் முன்னாள் கேப்டன் டூப்பிளசிஸ் சிஎஸ்கே அணியில் இருந்தபோது, ஒரு சீசன் முழுவதும் வீரர்களுக்காக 'கூல்டிரிங்ஸ்' சுமந்து சென்றதைப் பார்த்தபோது எனக்கு வேதனையாக இருந்தது. மனது வலித்தது.

அவருக்கு டி20 போட்டியில் சிறந்த பேட்டிங் சராசரி இருக்கிறது. இதே கூல்டிரிங்ஸ் சுமக்கும் பணியை இந்த ஆண்டு நான் செய்கிறேன். டூப்பிளசிஸ் எவ்வாறு நினைத்திருப்பார் என்று எனக்குள் எண்ணம் தோன்றியது. அதன்பின் அவரிடம் நான் பேசினேன்.

சிஎஸ்கே அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் செட்டில் ஆகிவிட்டதால், 5-வதாக ஒருவருக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது கடினமான ஒன்றாகும்''.

இவ்வாறு இம்ரான் தாஹிர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x