

ஐபிஎல் 2020 தொடரில் கேப்டனாகவும் வீரராகவும் அசத்தி வருகிறார் கே.எல்.ராகுல். இந்த ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் 540 ரன்கள் எடுத்து முதலிடம் வகிக்கிறார்.
கே.எல்.ராகுல் ஒரு ஆல்ரவுண்ட் பேட்ஸ்மென், அவர் 3 வடிவத்துக்கும் முக்கியமான வீரர் என்று மே.இ.தீவுகள் லெஜண்ட் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பிரையன் லாரா கூறியதாவது:
கே.எல். ராகுல் என் டெஸ்ட் பேட்ஸ்மென், டி20 பேட்ஸ்மென், 50 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மென்.
கேப்டனாக அசத்துகிறார், அவர் பேட் செய்யும் விதம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. கேப்டனாக அனைவரையும் ஒன்றிணைப்பதையும் திறம்பட செய்கிறார்.
தொடரின் ஆரம்பத்தில் அவர் போட்டிகளை வெற்றியுடன் முடிக்கத் திணறினார், இப்போது அந்த விஷயத்திலும் முன்னேறியுள்ளார், என்று மே.இ.தீவுகளின் வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்று விட்டார் கே.எல்.ராகுல்.
கே.எல்.ராகுல் ஏப்ரல் 2018 முதல் ஐபிஎல் தொடரில் ராகுல் 1,777 ரன்கள் எடுத்துள்ளார். இதுதான் அதிகபட்ச ரன்கள், அடுத்த இடத்தில் ஷிகர் தவண் இதே காலக்கட்டத்தில் 1377 ஐபிஎல் ரன்களை எடுத்துள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரில் ராகுல் 14 ஆட்டங்களில் 593 ரன்களை குவித்து 2ம் இடம் பிடித்தார்.
வரும் சனிக்கிழமையன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.