Last Updated : 22 Oct, 2020 07:53 AM

 

Published : 22 Oct 2020 07:53 AM
Last Updated : 22 Oct 2020 07:53 AM

பெங்களூருவுக்கு ‘ராயலான வெற்றி’: கொல்கத்தாவை சிதைத்த சிராஜ்: இளம் வீரர்கள் அசத்தல்: ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனைகள்

ஆர்சிபி அணியின் நட்சத்திர நாயகன், ஆட்டநாயன் விருது வென்ற முகமது சிராஜ் : படம் உதவி ட்விட்டர்

அபு தாபி

முகமது சிராஜ்ஜின் அசரவைக்கும் வேகப்பந்துவீச்சு, சாஹல் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களின் அபாரமான பங்களிப்பால் அபுதாபியில் நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 39-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் சேர்த்தது. 85 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 85 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்துக்கு பெங்களூரு அணி முன்னேறியுள்ளது. 10 போட்டிகளில் 7 வெற்றி, 3 தோல்வி என 14 புள்ளிகளுடன் பெங்களூரு அணி 2-வது இடத்தில் 0.182 ரன்ரேட்டில் வலிமையாக இருக்கிறது.

கொல்கத்தா அணி 10 போட்டிகளில் 5 வெற்றி, 5 தோல்வி என 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் நீடிக்கிறது.
கொல்கத்தா அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக இருந்த பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 4 ஓவர்கள்வீசிய சிராஜ் 2 மெய்டன்கள், 8 ரன்கள் கொடுத்து 3விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஐபிஎல் சாதனைகள்

26 வயதான முகமது சிராஜ் தனது முதல் ஓவரிலேயே ரன் ஏதும் கொடுக்காமல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது 2-வது ஓவரில் மற்றொரு விக்கெட்டை வீழ்த்தி மெய்டன் ஓவராக மாற்றி மொத்தம் தனது 4 ஓவர்களில் 2 மெய்டன் ஓவர்கள் வீசினார். ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு வீரர் 2 மெய்டன் எடுப்பது இதுதான் முதல் முறையாகும்.

ஐபிஎல் வரலாற்றிலேயே கொல்கத்தா அணி சேர்த்த ஸ்கோர் அந்த அணியின் மோசமான ஸ்கோராகும். 13 ஆண்டு ஐபிஎல் சீசனில் மிகக்குறைவான ஸ்கோர் கொல்கத்தா அணி சேர்த்ததாகும். மொத்தமுள்ள 20 ஓவர்களில் கொல்கத்தா அணி முதல் 4 ஓவர்களில் ரன் ஏதும் சேர்க்காமலேயே விக்கெட்டுகளை இழந்ததது வேதனை.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே பவர்ப்பளேயில் சேர்க்கப்பட்ட மிகக்குறைந்த ஸ்கோர் நேற்று கொல்கத்தா அணி சேர்த்ததாகும். பவர்ப்ளேயில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதற்கு முன்கடந்த 2009ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணி எதிராக கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் சேர்த்ததே குறைந்தபட்சமாக இருந்தது. அதைவிட குறைவாக இந்தப் போட்டியில் சேர்த்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி 4 மெய்டன்கள் எடுத்தது இந்தப் போட்டியில்தான். முகமது சிராஜ் 2 மெய்டன்கள், மோரிஸ், சுந்தர் தலா ஒரு மெய்டன் ஓவர் வீசினர்.

ஒரு போட்டியில் அதிகமான டாட் பந்துகளை பேட்ஸ்மேன்கள் விட்ட 2-வது போட்டி இதுவாகும். இந்தப் போட்டியில் மொத்தம் 120 பந்துகளில் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் 72 டாட்பந்துகளை கோட்டைவிட்டனர். இதற்கு முன் கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு எதிராக கொல்கத்தா அணி 75 டாட்பந்துகளை விட்டதுதான் அதிகபட்சமாகும். இந்த ஆண்டு அபுதாபியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 57 டாட்பந்துகளை கொல்கத்தா அணி விட்டது 3-வதாகும்.

ஐபிஎல் வரலாற்றிலேயே முதலில் பேட் செய்த அணி ஆல்அவுட் ஆகாமல் 8 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் சேர்த்ததுதான் மிகவும் குறைந்தபட்சமாகும். இதற்கு முன் 2011ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் சேர்த்தது.

கொல்கத்தா அணியில் டாப் 3 பேட்ஸ்மேன்கள் சேர்ந்து 2 ரன்கள் சேர்த்ததுதான் ஐபிஎல் வரலாற்றில் 2-வது மிகக்குறைந்த ஸ்கோராகும். இதற்கு முன் 2009-ல் சிஎஸ்கே அணிக்கு எதிராக டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் டக்அவுட் ஆகினர்.

ஆர்சிபி அணியினர் வீசிய முதல் 4 ஓவர்களிலேயே கொல்கத்தா அணியின் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தனர். இதற்கு முன் 2017-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி இதைச் செய்திருந்தது.
இந்த சாதனைகள் எல்லாம் நேற்று ஒரே போட்டியில் நிகழ்த்தப்பட்டவையாகும்.

இளம் வீரர்களிடம் 'ஸ்பார்க்'

ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை கேப்டன் விராட் கோலியி்ன் கேப்டன்ஷிப் நேற்று சிறப்பாக இருந்தது. இளம் வீரர்கள் மீது அதிகமான நம்பிக்கை வைத்து கோலி அளித்த பொறுப்புகளை அவர்கள் சிறப்பாகச் செய்தனர், செய்து வருகிறார்கள். சைனி, சிராஜ், சாஹல், சுந்தர், படிக்கல், குர்கீரத் என அனைவருமே கோலியின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் அபாரமாக செயல்படுகிறார்கள்.

கோலிக்கு மட்டும் இளைஞர்களிடம் இருக்கும் ஸ்பார்க் எப்படி தென்படுகிறது, சில கேப்டன்களிடம் இளைஞர்களிடம் ஸ்பார்க் ஏன் தெரியவில்லை எனப் புரியவில்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்த அணி ஒரு கட்டத்தில் தடுமாறினாலும் நிச்சயம் முன்னேற்றப்பாதைக்கு செல்லும் என்பதை கோலியின் அணி நிரூபித்துள்ளது.

இந்த ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து செயல்பட்ட அணிகளில் அவர்களின் பங்களிப்பு சிறப்பாகவே இருந்துள்ளது. அதற்கு ஆர்சிபி அணி பெற்ற வெற்றிகளே சாட்சி.

அதிலும் முகமது சிராஜ் வீசிய முதல் இரு ஓவர்களில் 3 விக்கெட்டுகள் வீழ்ந்தபோதே கொல்கத்தா அணியின் சரிவு முடிவாகிவிட்டது. முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரில் அடுத்தடுத்த பந்தில் திரிபாதி(1), ராணா(0) விக்கெட்டுகளை இழந்தனர். தனது 2-வது ஓவரை சிராஜ் வீசியபோது பாண்டன்(10) விக்கெட்டை இழந்தார். இந்த 3 விக்கெட்டுகளுமே கொல்கத்தாவின் சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.

சிராஜ் ஏற்படுத்த சரிவுக்குப்பின் சைனி, சாஹல், மோரிஸ், சைனி, வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சாளர்கள் தங்கள் பங்கிற்கு நெருக்கடி கொடுக்க கொல்கத்தா அணியால் ரன் சேர்ப்பதே மிகக்கடினமாகிவிட்டது.
இந்த தொடர் முழுவதுமே சிறப்பான செயல்பட்டுவரும் சாஹல் நேற்று 4 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த ஆட்டத்திலேயே கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் மொத்தம் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் மட்டுமே அடித்திருந்தனர்.ஒட்டுமொத்தமாக ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

மோசமான ஆட்டம்

கொல்கத்தா அணியின் மோசமான ஆட்டத்தை நேற்றுக் காண முடிந்தது. சரிவுக்கு என்ன காரணம் என்று கேப்டனும், பயிற்சியாளரும் யோசிப்பதற்குள் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால், தோல்வி என்பது முதல் பேட்டிங் முடிந்தபோதே ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

84 ரன்களை வைத்துக்கொண்டு நிச்சயம் எதிரணியை கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமில்லை. வெற்றியை அப்படியே கொல்கத்தா அணி ஆர்சிபியிடம் தாரைவார்த்திருக்கலாம், இருந்தாலும் களத்தில் போராட வேண்டும் என்பதற்காக கொல்கத்தா அணியினர் பந்துவீசினர்.

கொல்கத்தா அணியில் முக்கிய பந்துவீச்சாளர் சுனில் நரேன், அதிரடி ஆட்டக்காரர் ஆன்ட்ரூ ரஸல் இல்லாதது மிகப்பெரிய பலவீனம். இவர்கள் இல்லாமல் போனாலும், கில், ராணா, பாண்டன், மோர்கன், கார்த்திக் என அனைவரும் பேட்டிங்கில் சொதப்பியதற்கான காரணம் புரியவில்லை. ஒட்டுமொத்தத்தில் பேட்டிங், பந்துவீச்சு அனைத்திலும் கொல்கத்தாவின் மோசமான தோல்வியாகும்.

எளிதான வெற்றி

85 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு படிக்கல், பின்ஞ்ச் நல்லத் தொடகத்தை அளித்து 46 ரன்கள் சேர்த்தனர். பின்ச்(16) ரன்னிலும் படிக்கல்(25) ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கோலி 18, குர்கீரத் 21 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 13.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் சேர்த்து ஆர்சிபி அணி வென்றது.

விக்கெட் சரிவு

முன்னதாக கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. கில்,திரிபாதி ஆட்டத்தைத் தொடங்கினர். சிராஜ் வீசிய 2-வது ஓவரில் 3-வது பந்தில் திரிபாதியும்(1) டிவில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தபந்தில் ராணா(0) க்ளீன் போல்டாகி வெளியேறினார். சைனி வீசிய 3-வது ஓவரில் கில்(1) தூக்கி அடிக்கமுற்பட்டு மோரிஸிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 3 ரன்களுக்கு 3 விக்கெட்டு என கொல்கத்தா அணி திணறியது.

சிராஜ் வீசிய 4-வது ஓவரில் பாண்டன்(10) டிவில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். 14ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி தடுமாறியது.

அதன்பின் சீரான இடைவெளியில் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். கார்த்திக்(4) ரன்னில் சாஹல் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். கம்மின்ஸ்(4), கேப்டன் மோர்கன்(3) பொறுமையாக ஆடிய நிலையில் அவருக்கு ஒத்துழைக்க யாருமில்லை என்பதால், சுந்தர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். குல்தீப் யாதவ்(12) ரன்னில் ரன்அவுட் ஆகினார்.

பெர்குசன் 19 ரன்னில் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் சேர்த்தது. ஆர்சிபி அணி தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளையும், சாஹல் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x