

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா - நார்த் ஈஸ்ட் அணிகள் மோதின. 23-வது நிமிடத்தில் கொல்கத்தா வுக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத் தது. அதில் புருனோ வேகமாக பந்தை உதைக்க, அதை மிக அற்புதமாக முறியடித்தார் கொல்கத்தா கோல் கீப்பர்.
29-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட்டின் வலது பின்கள வீரர் ரீகன் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோலடிக்க முயற்சித்தார். ஆனால் கொல்கத்தா கோல் கீப்பர் அம்ரிந்தர் அதை மிக அற்புதமாக தகர்க்க, கொல்கத்தா அணி கோல் வாங்குவதில் இருந்து தப்பியது. இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.
63-வது நிமிடத்தில் முன்கள வீரர் டேட்ஸீயை வெளியேற்றிவிட்டு அவருக்குப் பதிலாக நிகோலஸ் வெலஸை களமிறக்கியது நார்த் ஈஸ்ட். கொல்கத்தா அணி தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை ஆடியது. 67-வது நிமிடத்தில் பந்தை வேகமாக முன்னோக்கி எடுத்துச் சென்ற நிகோலலஸ் வெலஸ் நேராக கொல்கத்தா கோல் கீப்பரிடம் அடித்ததால் அது ஏமாற்றத்தில் முடிந்தது.
77-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட்டின் வெலஸ் பந்துடன் முன்னேற கோல் கம்பத்தின் இடது புறத்தில் வைத்து அவரை கொல்கத்தா பின்கள வீரர்கள் மடக்கினர். அப்போது சுதாரித்துக் கொண்ட அவர், தங்கள் அணியின் மாற்று பின்கள வீரரான சஞ்சுவுக்கு பந்தைத் திருப்பினார். அதை வாங்கிய சஞ்சு பந்தை கோல் கம்பத்தை நோக்கி உதைத்தார். அப்போது கொல்கத்தாவின் பின்கள வீரர் பந்தைத் தடுக்க, அது அவருடைய உடலில் பட்டு மேலே எழும்பியது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட வெலஸ் கோலடித்தார். கொல்கத்தா அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை.
முடிவில் நார்த் ஈஸ்ட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இது அந்த அணிக்கு 2-ஆவது வெற்றியாகும்.