Last Updated : 17 Oct, 2015 08:38 PM

 

Published : 17 Oct 2015 08:38 PM
Last Updated : 17 Oct 2015 08:38 PM

அபுதாபி டெஸ்ட் போட்டியில் திடீர் திருப்பம்: இங்கிலாந்து வெற்றியைப் பறித்த வெளிச்சமின்மை

அபுதாபியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 5-ம் நாளான இன்று திடீர் திருப்பம் ஏற்பட, பாகிஸ்தான் அணி அதிர்ச்சித் தோல்வியிலிருந்து போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டதால் தப்பித்தது. டெஸ்ட் போட்டி பரபரப்பான டிரா ஆனது.

பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 523 ரன்களைக் குவிக்க இங்கிலாந்து 598 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அதிர்ச்சிகரமாக 173 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டு போக, 99 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து களமிறங்கிய இங்கிலாந்து அணி இதனை 19 ஓவர்களில் அடிக்க வேண்டி வந்தது, 11 ஓவர்களில் 74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து இன்னும் 8 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற 25 ரன்களே தேவை, ஆனால் வெளிச்சம் மறைந்து போக ஆட்டம் அந்த நிலையில் டிரா ஆனது. இரு கேப்டன்களின் சம்மதத்தின் பேரில் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

ஆனால் இது ஒரு அரிய டெஸ்ட் போட்டியாகும், 5-ம் நாளான இன்று காலை வரை கூட முதல் இன்னிங்ஸ்தான் முடிந்திருந்தது. காரணம் 4-ம் நாளான நேற்று 569/8 என்ற நிலையில் கடைசி நாளான இன்று இங்கிலாந்து களமிறங்கி மேலும் 29 ரன்களைக் குவித்து 598/8 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. அதாவது இன்றைய 90 ஓவர்களிலும் 10 ஓவர்களை இங்கிலாந்து ஆடியது. 2 ஓவர்கள் போக மொத்தம் 78 ஓவர்களே உள்ள நிலையில் 2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தான் ஜேம்ஸ் ஆண்டர்சனின் அருமையான பந்து வீச்சுக்கு முதல் 3 ஓவர்களிலேயே சான் மசூத் (1), ஷோயப் மாலிக் (0) ஆகியோரை ஒரே ஓவரில் இழந்தது. இதில் ஷோயப் மாலிக்கிற்கு ஆண்டர்சன் வீசிய பவுன்சர் அபாரமானது, மாலிக்கிற்கு மட்டையில் தானாக பட்டுச் சென்ற பந்து எங்கு சென்றது என்று கூட தெரியவில்லை.

அதன் பிறகு அடில் ரஷீத் என்ற லெக் ஸ்பின்னர், தனது அறிமுகப் போட்டியை ஆடுபவர், முதல் இன்னிங்சில் 34 ஓவர்கள் வீசி 163 ரன்கள் கொடுத்து விக்கெட் எடுக்காமல் ஏச்சுக்கும், பேச்சுக்கும், கேலிக்கும் ஆளானவர் 2-வது இன்னிங்ஸில் 18.5 ஓவர்கள் வீசி 3 மெய்டன்களுடன் 64 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மொயீன் அலி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மொகமது ஹபீஸ் ரன் அவுட் ஆனார். ஸ்டோக்ஸின் கையை பரிசோதித்ததால் வந்த விளைவு.

தேநீர் இடைவேளையின் போது யூனிஸ் கான், மிஸ்பா உல் ஹக்கின் பொறுமையான ஆட்டத்தினால் ஸ்கோர் 102/3 என்று இருந்தது. அதன் பிறகு யூனிஸ் கான் 45 ரன்களில் தளர்வான ஷாட்டுக்கு கேட்ச் கொடுத்து அடில் ரஷீத்தின் முதல் டெஸ்ட் விக்கெட்டானார்.

ஆசாத் ஷபிக் 6 ரன்களில் ரஷீத்திடம் வீழ்ந்தார், ஜோஸ் பட்லர் கேட்ச் பிடித்தார். மிஸ்பா உல் ஹக் ஒரு அருமையான 51 ரன்களுக்குப் பிறகு மொயீன் அலி பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்று பந்தைக் கோட்டை விட பவுல்டு ஆனார். வஹாப் ரியாஸ் 1 ரன்னில் ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து அலியிடம் வீழ்ந்தார். சுல்பிகர் பாபர் 1 ரன்னில் ஸ்லிப்பில் ஆண்டர்சனின் அபாரமான ஒரு கை கேட்சுக்கு ரஷீத்திடம் வெளியேறினார். சர்பராஸ் அகமது 36 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்து ரஷீத் பந்தை ஸ்லிப்பில் ஆண்டர்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே ஓவரின் அடுத்த பந்தில் இம்ரான் கான் மீண்டும் எட்ஜ் செய்து ஆண்டர்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 57.5 ஓவர்களில் பாகிஸ்தான் 173 ரன்களுக்குச் சுருண்டது.

99 ரன்களை 19 ஒவர்களில் எடுக்கும் முயற்சியுடன் களமிறங்கிய இங்கிலாந்து மொயீன் அலியையும், ஜோஸ் பட்லரையும் தொடக்கத்தில் களமிறக்கியது. பட்லர் ஷோயப் மாலிக் பந்தில் 4 ரன்களில் எல்.பி. ஆனார். பீல்டர்கள் தள்ளி நிறுத்தப்பட ரன்கள் ஒன்று இரண்டு என்று வர 4.4 ஓவர்களில் 29 ரன்களை எட்டிய இங்கிலாந்து அப்போது மொயின் அலியை 11 ரன்களில் சுல்பிகர் பாபரிடம் இழந்தது. ஸ்டோக்ஸ் 2 ரன்களில் அடிக்கும் முயற்சியில் மாலிக்கிடம் வீழ்ந்தார். இங்கிலாந்து 35/3 என்று ஆனது.

ஆனால் ஜோ ரூட் 29 பந்துகளில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தாலும் 33 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். இயன் பெல் 5 நாட் அவுட். ஜானி பேர்ஸ்டோ ஒரு பவுண்டரி, வஹாப் ரியாஸை ஒரு அபாரமான சிக்சருடன் 15 ரன்கள் எடுத்து சுல்பிகர் பாபரிடம் வீழ்ந்த போது 9.2 ஓவர்களில் இங்கிலாந்து 66/4 என்று இருந்தது. அதன் பிறகு 2 ஓவர்கள்தான் வீச முடிந்தது இங்கிலாந்து 74/4 என்று முடிந்தது. ஆட்டம் டிரா ஆனது. இன்னும் 8 ஓவர்களை வீச முடியவில்லை. மைதானத்தில் இருள் சூழத் தொடங்கியது. அருமையான ஒரு டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்தது. வஹாப் ரியாஸ் 2 ஓவர்களில் 20 ரன்களை விட்டுக் கொடுத்தார், இதில் 1 ஓவரில் 17 ரன்கள், இதில்தான் அவர் வீசிய தலை உயர பவுன்சரை பேர்ஸ்டோ அபாரமாக மிட்விக்கெட் மீது சிக்சர் அடித்தார். ஆட்ட நாயகனாக மாரத்தான் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிய அலிஸ்டர் குக் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x