

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் புனே சிட்டி அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் 9 புள்ளிகளைப் பெற்றுள்ள சென்னை அணி, புள்ளிகள் பட்டிய லில் 2-வது இடத்துக்கு முன்னேறி யுள்ளது.
சென்னையில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் சென்னை அணியில் 6 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே மென்டோஸா கோல் கம்பத்தை நோக்கி பந்தை எடுத்துச் சென்றார். ஆனால் அவர் அடித்த ஷாட்டில் வேகமில்லாததால் புனே கோல் கீப்பர் சைமன்ஸென் அதை எளிதாக தகர்த்தார்.
20-வது நிமிடத்தில் சென்னை அணியின் இடது விங்கரான ஜெயேஷ் ரானே கொடுத்த கிராஸில், 6 யார்ட் தூரத்தில் இருந்து பந்தை கோல் கம்பத்தை நோக்கி திருப்பினார் இலானோ. ஆனால் அதை சைமன்ஸென் அற்புதமாக முறியடித்து தங்கள் அணியை காப்பாற்றினார்.
34-வது நிமிடத்தில் சென்னை அணிக்கு ‘த்ரோ இன்’ வாய்ப்பு கிடைத்தது. அதில் சென்னை அணியின் இடது பின்கள வீரரான தனா, இடது எல்லையில் இருந்து பந்தை மிக அற்புதமாக கோல் கம்பத்துக்கே வீசினார். அப்போது கோல் கம்பத்தின் முன்னால் நின்ற பின்கள வீரர் மென்டி, தலையால் முட்டி கோலடித்தார். இதனால் சென்னை 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 45-வது நிமிடத்தில் புனேவின் கோல் வாய்ப்பை அற்புதமாக முறியடித்தார் சென்னை கோல் கீப்பர்.
2-வது பாதி ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே (48-வது நிமிடம்) அடுத்த கோலை அடித்து அசத்தியது சென்னை. மிட்பீல்டில் புனே வீரர்களிடம் இருந்து பந்தை பறித்த இலானோ, அதை மென்டோஸாவுக்கு கடத்த, அவர் மிக அற்புதமாக புனேவின் பின்கள வீரர்களை மட்டுமின்றி, கோல் கீப்பரையும் வீழ்த்தி எளி தாக கோலடித்தார். இந்த சீசனில் அவர் அடித்த 6-வது கோல் இது.
இதன்பிறகு தீவிரமாகப் போராடிய புனே அணி, 75-வது நிமிடத்தில் கோலடித்தது. பின்கள வீரர் ராவணன் உதவியுடன் இந்த கோலை அடித்தார் கலு உச்சே. இறுதியில் சென்னை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.