Published : 20 Oct 2020 03:28 PM
Last Updated : 20 Oct 2020 03:28 PM

நல் மதிப்புடன் விலகி விடுங்கள் தோனி, பிளெமிங்: தோல்வி மேல் தோல்வியால் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கொந்தளிப்பு

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தோனி தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் அணியுடன் வெற்றி பெற்றிருந்தால் ஒரு புறவாய்ப்பு இருந்திருக்கும் ஆனால் அந்த அணியுடன் நேற்று பேட்டிங்கில் சொதப்பி படுமோசமாக தோல்வியடைந்ததையடுத்தும், இளம் வீரர்களிடத்தில் நாங்கள் பெரிதாக ‘தீப்பொறி’பறக்கும் உத்வேகம் எதையும் காணவில்லை என்று தோனி கூறியதையடுத்தும் நெட்டிசன்கள் கடும் கோபமாக தோனிக்கும், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்குக்கும் எதிராக பதிவிட்டு வருகின்றனர்.

சிஎஸ்கே தற்போது ஐபிஎல் அட்டவணையில் 6 புள்ளிகளுடன் அட்டவணையின் கடைசி பெயராக உள்ளது.

இந்நிலையில் ரசிகர்கள் பலர் ட்விட்டர், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வந்து ஸ்டீபன் பிளெமிங்கையும், தோனியையும் ’நன்மதிப்புடன் தயவு கூர்ந்து வெளியேறி விடுங்கள் அதுதான் நல்லது’ என்று அறிவுரை வழங்கி வருகின்றனர்.

ரசிகர்களின் அந்தப் பதிவுகளில் இதோ சில:

“பிளெமிங்கும் தோனியும் இந்த மோசமான ஆட்டத்துக்குப் பொறுப்பேற்று விலகிவிடுவது நல்லது. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். அவர்கள்தான் மஞ்சள் ராணுவத்தை முன்னேற்ற முடியும். ஜடேஜா, சாம் கரணை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள், மற்றவர்களுக்கு பிரியாவிடை கொடுங்கள், குட்லக் சிஎஸ்கே ஃபார் 2021. புதிய நம்பிக்கைகளுடன் புதிய தொடக்கமாக இருக்கட்டும்.”

“தோனியின் ரசிகனாக இருந்து கொண்டு அவர் இப்படி ஆடுவதை பார்ப்பது வேதனையாக இருக்கிறது. அவருக்கு கஷ்ட காலம் ஏற்பட்ட போதெல்லாம் ஆதரவு தெரிவித்தேன், ஆனால் இப்போது அவர் வெளியேறுவது நல்லது என்றே நினைக்கிறேன். அணிக்காக அவர் விலகி விட வேண்டும். சிஎஸ்கே இல்லாத பிளே ஆஃப் சுற்றை நினைத்துப் பார்க்க முடியவில்லை”

“எம்.எஸ்.டி. அணிக்காக அனைத்தையும் கொடுத்தார், உணர்வுபூர்வமாக அணியுடன் ஐக்கியமாகியுள்ளார். எனவே அவர் மோசமான நிலையில் வெளியேறுவதை பார்க்க விரும்பவில்லை. அவர் சிஎஸ்கேவை விடுத்து குடும்பத்துடன் ஓய்வாக நேரத்தைச் செலவிடலாம். சிஎஸ்கே மிக மோசமான நிர்வாகத்தின் கீழ் உள்ளது, கிரிக்கெட்டுக்கு பதில் வியாபாரமே பார்க்கின்றனர். நிர்வாகத்தில் மாற்றம் நிச்சயமாக தேவைப்படுகிறது”

“உங்கள் மீது பைத்தியமான நான் கூறுகிறேன் சீசன் முடிந்ததும் வெளியேறி விடுங்கள், உங்களை பயிற்சியாளராகவோ, நம்பிக்கை ஆலோசகராகவோ கூட நாங்கள் பார்க்க விரும்பவில்லை. தல பிளீஸ் ஜெகதீசன் உட்பட பல இளம் வீரர்களை வீணடித்து விட்டீர்கள். சிஎஸ்கேவுக்கு அடுத்த ஆண்டும் வந்து விடாதீர்கள், பிரியாவிடை.”

என்று தீவிரமாகச் சிலரும் இன்னும் பலர் இளைஞர்களுக்கு வாய்ப்பளியுங்கள் என்று கூறியும், ஸ்பார்க் என்பது என்ன வாய்ப்பு கொடுத்தால்தானே தெரியும் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். மொத்தத்தில் சிஎஸ்கே மீதும், நிர்வாகத்தின் மீதும் பயிற்சியாளராக செயல்படாமல் தோனியின் டிசைன்களுக்கு பிளெமிங் வளைந்து கொடுக்கிறார் என்றும் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x