

தன்னைப் பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்ட ஆங்கிலப் பத்திரிகையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என சர்வதேச பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரோனா நெருக்கடியால் முக்கியமான சர்வதேச பேட்மிண்டன் தொடர்கள் ரத்தாகியுள்ளன. இந்நிலையில் தனது விளையாட்டுத் திறனை, உடல் திடத்தை மேம்படுத்த பி.வி.சிந்து கடந்த வாரம் இங்கிலாந்துக்குச் சென்றுள்ளார். அங்குள்ள தனியார் மையத்தில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் பி.வி.சிந்து லண்டன் சென்றதில் அவரது குடும்பத்தில் அதிருப்தி நிலவுவதாக ஒரு ஆங்கில தினசரியில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சிந்து தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாகப் பதிவு செய்துள்ளார்.
"ஜிஎஸ்எஸ்ஐ (கேடரேட் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் இன்ஸ்டிட்யூட்) பயிற்சியின் தேவைக்கேற்ப எனது ஊட்டச்சத்து மற்றும் உடலின் திடத்தைச் சரி செய்ய சில நாட்களுக்கு முன்பு லண்டன் வந்தேன். எனது குடும்பத்தின் ஒப்புதலோடுதான் நான் இங்கு வந்திருக்கிறேன். இதுகுறித்து குடும்பத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எனக்காக தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்த பெற்றோரிடம் எனக்கு எதற்கு பிரச்சினை வரப்போகிறது?
எங்களுடையது அதிக பிணைப்பு இருக்கும் ஒரு குடும்பம். அவர்கள் எப்போதும் என்னை ஆதரிப்பார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களோடு உரையாடி வருகிறேன். மேலும், எனது பயிற்சியாளர் கோபிசந்த் உடனோ அல்லது அகாடமியில் இருக்கும் பயிற்சி வசதிகளிலோ எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
பொய்யான செய்திகளைப் பரப்பி வரும் குறிப்பிட்ட ஆங்கில தினசரியின் விளையாட்டுப் பிரிவு பத்திரிகையாளர், எழுதுவதற்கு முன் உண்மைகளை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் இதை நிறுத்தவில்லையென்றால் அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்".
இவ்வாறு சிந்து தெரிவித்துள்ளார்.