Last Updated : 19 Oct, 2015 08:32 PM

 

Published : 19 Oct 2015 08:32 PM
Last Updated : 19 Oct 2015 08:32 PM

வேகப்பந்து வீச்சாளர் நாது சிங்கிடம் அரிய திறமை உள்ளது: சந்தீப் பாட்டீல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் கிரிக்கெட் வாரியத் தலைவர் அணியில் ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நாது சிங் பெயர் இடம்பெற்றது குறித்து பலருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டிருக்கும். நாது சிங்கே முதலில் அதனை தான் நம்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

காரணம், 3 ரஞ்சி டிராபி போட்டிகளில்தான் அவர் ஆடியுள்ளார். இதில் 11 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் 20 வயது வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கு ஹஷிம் ஆம்லா, ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆகியோருக்கு வீச வாய்ப்பு கிடைத்துள்ளது. டெல்லிக்கு எதிராக அறிமுகப் போட்டியில் 87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைச் சாய்த்தார் நாது சிங்.

இது குறித்து நாது சிங் பிடிஐ-யிடம் தெரிவிக்கும் போது, "சக வீரர் என்னை அழைத்து 'வாழ்த்துக்கள்' என்றார். நான் எதற்கு வாழ்த்துக்கள் என்றேன், கிரிகெட் வாரியத் தலைவர் அணியில் என்னை தேர்வு செய்திருப்பதாக கூறினார். நான் ‘ஜோக்’ அடிக்க வேண்டாம் என்றேன். இது சாத்தியமல்ல என்றுதான் நினைத்தேன், ஆனால் ஆர்வமிகுதியில் இணையதளத்துக்குச் சென்று பார்த்தபோது என் பெயர் இருந்தது எனக்கு ஒரு இனிய அதிர்ச்சியாக இருந்தது. இன்னும் கூட அது என்னுள் இறங்கவில்லை” என்றார்.

ஆனால், இவருக்கு பயிற்சியளித்த எம்.ஆர்.எப் வேகப்பந்து அகாடமியின் இயக்குநரும் வேகப்பந்து வீச்சு மேதையுமான கிளென் மெக்ரா, தன்னைப் பற்றி கூறியதை எடுத்துரைத்த நாது சிங், “மெக்ராத் (சார்), நான்வலைப்பயிற்சியில் வீசுவதைப் பார்த்து, உள்ளூர் பயிற்சியாளர்களிடம் கூறும்போது, உள்ளே ஸ்விங் செய்யும் பந்துகள் அருமையாக உள்ளது என்று கூறியதோடு, எனது வேகத்தின் அளவு குறித்தும் திருப்தியடைவதாக தெரிவித்தார். மேலும் இந்தியாவின் எதிர்காலம் நான் என்றார். அவர் மேலும், நான் வேகத்தைக் குறைக்க ஒருபோதும் சமரசம் செய்யக் கூடாது என்று அறிவுரை வழங்கினார். நான் அதிகபட்சமாக வீசிய பந்தின் வேகம் மணிக்கு 145கிமீ ஆகும்” என்றார்.

சந்தீப் பாட்டீல், நாது சிங் தேர்வு குறித்து கூறியதாவது:

நாங்கள் எப்போதுன் சிறப்பான ஒன்றை தேடியபடிதான் இருப்போம். வெறும் ஸ்கோர் ஷீட்களை பார்த்து தேர்வு செய்வதென்றால் புள்ளி விவர நிபுணர்களே அணியைத் தேர்வு செய்து விடலாம். கடந்த 3 ஆண்டுகளாக அனைத்து உள்ளூர் போட்டிகளையும் நாங்கள் பார்த்து வருகிறோம். எப்பவுமே, கூடுதல் திறமை, கூடுதல் வீச்சு யாரிடம் இருக்கிறது என்பதை நாங்கள் கவனிக்கத் தவறுவதில்லை. இவ்வகையில் நாது சிங்கிடம் வேறொரு திறமை பளிச்சிட்டதை அறிந்திருந்தோம், என்கிறார் சந்தீப் பாட்டீல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x