

கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான துபாயில் நடந்த ஐபிஎல் 36வது போட்டியில் மயங்க் அகர்வால் பும்ராவிடம் இரண்டாவது முறையாக பவுல்டு ஆகி 11 ரன்களுக்கு வெளியேறினார்.
ஆனால் கடைசியில் அவர் செய்த பிரமிக்கத்தக்க பீல்டிங் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது, இதுதான் பஞ்சாப் போட்டியையே வெல்லக் காரணமும் கூட. ரிக்கி பாண்டிங்காக இருந்தால் ஓய்வறை ஆட்டநாயகனாக அகர்வாலைத் தேர்வு செய்திருப்பார்.
அதே போல் முதல் சூப்பர் ஓவரில் கே.எல்.ராகுல் பந்தை அற்புதமாக டைவ் அடித்து வாங்கி டி காக்கை ரன் அவுட் செய்ததும் வெற்றிக்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஷமி யார்க்கர்களாக வீசி 5 ரன்களை மிகப்பிரமாதமாகத் தடுத்ததும் இன்னொரு வெற்றிக்கணம்.
2வது சூப்பர் ஓவரில் அந்த சிக்ஸரை மயங்க் விட்டிருந்தால் மும்பைக்கு வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும். அப்போதுதான் தகுதிக்கும் மீறி எம்பி பந்தைப் பிடித்தே விட்டார் மயங்க் அகர்வால், ஆனால் அதே எம்பிய நிலையிலேயே சமயோசிதமாக தரையில் கால் படுவதற்கு முன்பே பந்தை மைதானத்துக்குள் தள்ளி விட்டார், இதனையடுத்து மும்பை 2வது சூப்பர் ஓவரில் 11 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
பிறகு 12 ரன்கள் வெற்றி என்ற நிலையில் ட்ரெண்ட் போல் வீசிய முதல் புல்டாஸை யுனிவர்ஸ் பாஸ் லாங் ஆன் கேலரிக்கு அனுப்ப, அடுத்த சிங்கிளில் மயங்க் அகர்வால் ஸ்ட்ரைக்கு வந்தார், முதலில் ஒதுங்கிக் கொண்டு எக்ஸ்ட்ராகவரில் ஒரு சக்தி வாய்ந்த பவுண்டரி அடித்தார், பிறகு இன்னொரு புல்டாஸை மிட் ஆன், மிட்விக்கெட்டுக்கு இடையே தூக்கி அடித்து அபார வெற்றியை சாத்தியமாக்கினார் அகர்வால்.
இந்நிலையில் அவர் ஐபிஎல் டி20 இணையதள உரையாடலில் கூறிய போது, ‘டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக தோற்ற போட்டி நினைவில் இருந்தது. இருப்பினும் கெய்ல் என்னிடம், ‘மயங்க் பந்தை நன்றாகப் பார், மற்றது நல்லபடியாக நடக்கும்’ என்றார்.
அதுதான் சூப்பர் ஓவரில் என் மனதில் இருந்தது, பந்தைப் பார் அடி என்ற எண்ணம் தான் என் மனதில் இருந்தது. ஒன்று, இரண்டு எடுக்கும் எண்ணமில்லை. பவுண்டரி அடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன் அதிர்ஷ்டவசமாக அமைந்தது’ என்றார்