

டாடீஸ் ஆர்மி என்று கடந்த ஐபிஎல் தொடரிலிருந்தே அழைக்கப்படும் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் கடும் ‘உதை'களை வாங்கி வருகிறது.
பேட்டிங் இருந்தால் பவுலிங் இல்லை, பவுலிங் இருந்தால் பேட்டிங் இல்லை, இரண்டும் இருந்தா பீல்டிங் இல்லை மூன்றும் இல்லை என்பது எதனால் என்றால் உடல்தகுதியுடைய வீரர்கள் இல்லை. ரெய்னா, ஹர்பஜன் இல்லாதது, தொடர்ந்து இம்ரான் தாஹிரை குளிர்பானம் சுமக்க வைப்பது என்று ஏகப்பட்ட சிக்கல்களை சிஎஸ்கே விமர்சன ரீதியாகச் சந்தித்து வருகிறது.
இந்நிலையில் ‘எவர் க்ரீன்’ எம்.எஸ். தோனி இன்று அபுதாபியில் சிஎஸ்கே அணிக்காக ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராகக் களம் காண்பது அவரது 200வது ஐபிஎல் போட்டியாகும்.
2010, 2011, 2018-ல் ஐபிஎல் சாம்பியன்களான சிஎஸ்கே இந்தத் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றால் அது பயங்கர அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும்.
2008 தொடக்க ஐபிஎல் தொடரிலிருந்தே சிஎஸ்கேவின் கேப்டனாக சென்னை ரசிகர்களின் ‘தல’யாக தோனி வலம் வருகிறார்.
ரெய்னா ஐபிஎல் தொடர்களில் 194 போட்டிகளில் விளையாடியுள்ளார், தோனி இன்று தன் 200வது ஐபிஎல் போட்டியில் களம் காண்கிறார்.
இதுவரையிலான 199 ஐபிஎல் போட்டிகளில் தோனி 4,5658 ரன்களை 23 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 84 நாட் அவுட். அவரது ஸ்ட்ரைக் ரேட் 137.67.
பெரிய ஹிட்டர்களின் சிக்சர் வரிசையில் கெய்லின் 333 சிக்சர்கள் ஏபிடியின் 231 சிக்சர்கள், வரிசையில் தோனி 215 சிக்சர்களுடன் அடுத்ததாக உள்ளார்.
நடப்பு ஐபிஎல் போட்டியில் 9 ஆட்டங்களில் தோனி 147 ரன்களையே எடுத்துள்ளார். ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக விராட் கோலி 200 போட்டிகளில் ஆடியுள்ளார், ஆனால் இதில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 184, சாம்பியன்ஸ் லீகில் 16 போட்டிகளில் ஆடியுள்ளார்.