Published : 18 Oct 2020 01:28 PM
Last Updated : 18 Oct 2020 01:28 PM

4 ஆண்டுகளுக்கு முன் தோனி அணி செய்ததை திருப்பிச் செய்துள்ளார் அக்ஸர் படேல்: சிஎஸ்கேவை விமர்சித்த வீரேந்திர சேவாக்

டெல்லி அணி வீரர் அக்ஸர் படேல் : படம் உதவி ட்விட்டர்

புதுடெல்லி

4 ஆண்டுகளுக்கு முன் தோனி அணி என்ன செய்ததோ அதையே திருப்பிச் செய்துள்ளார் அக்ஸர் படேல் என்று சிஎஸ்கே அணியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் வம்பிழுத்துள்ளார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி தோற்கடித்தது.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. 180 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி ஒரு பந்து மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து185 ரன்கள் சேர்த்து 5 விக்ெகட் வித்தியாசத்தில் வென்றது.

கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவை. வழக்கமாக டெத் ஓவரை பிராவோதான் வீசுவார். ஆனால், திடீரென ஜடேஜா வீசியது வியப்பாக இருந்தது. அனுபவமான ஜடேஜாவின் ஓவரில் அக்ஸர் படேல், 3 சிக்ஸர்களை விளாசி வெற்றியுடன் ஆட்டத்தை முடித்தார்.

அக்ஸர் படேலின் அச்சமில்லாத, பதற்றப்படாத ஷாட்கள்தான் டெல்லி அணிக்கு வெற்றித் தேடித் தந்தன. ஷிகர் தவணும் நம்பிக்கை வைத்து ஸ்ட்ரைக்கை அக்ஸர் படேலிடம் கொடுத்தார். தன் மீதான நம்பிக்கையை உறுதி செய்த அக்ஸர், 3 அருமையான சிக்ஸர்களை ஜடேஜா பந்தில் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

அக்ஸர் படேலின் ஆட்டத்தைக் குறிப்பிட்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் ட்விட்டரில் சிஎஸ்கே அணியையும் தோனியையும் விமர்சித்துள்ளார். சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ ஷிகர் தவணிடம் இருந்து அற்புதமான சதம் கிடைத்தது. ஆனால், தோனி (சிஎஸ்கே) அணிக்கு அக்ஸர் படேல் செய்தது, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அக்ஸர் படேலுக்கு தோனி செய்ததை இந்தப் போட்டியில் அவர் திருப்பிச் செய்துள்ளார். சிஎஸ்கே அணியிடம் இருந்து நல்ல பேட்டிங் வெளிப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இடம் பெறவில்லை.ஆனால், ரைஸிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் கேப்டனாக தோனி இருந்தார். அப்போது கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியில் அக்ஸர் படேல் இருந்தார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த போட்டியைப் போன்று பரபரப்பான ஆட்டம், 2016, மே21-ம் தேதி நடந்தது. பஞ்சாப் அணி 172 ரன்கள் சேர்த்திருந்தது. புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 19 ஓவர்களில் 150 ரன்கள் சேர்த்திருந்தது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது. தோனி ஸ்ட்ரைக்கில் நிற்க, அக்ஸர் படேல் கடைசி ஓவரை வீசினார்.அக்ஸர் படேல் ஓவரை வெளுத்து வாங்கிய தோனி 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி 2 ரன்கள்என 23 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெற வைத்தார்.

அதைக் குறிப்பிட்டு வீரேந்தி சேவாக் தனது ட்விட்டரில் அக்ஸர் படேலுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அக்ஸர் படேலுக்கு தோனி செய்ததற்கு பதிலாக, தோனி அணிக்கு இப்போது அக்ஸர் படேல் செய்துவிட்டார் என்று விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x