

டெல்லி கேப்டல்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமாகிய அக்ஸர் படேல் அங்கீகரிக்கப்படாத ஹீரோ, அவர்கள் எங்கள் அணியின் சொத்து என்று டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ஷிகர் தவண் புகழாரம் சூட்டியுள்ளனர்.
ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி தோற்கடித்தது.
முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. 180 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி ஒரு பந்து மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து185 ரன்கள் சேர்த்து 5 விக்ெகட் வித்தியாசத்தில் வென்றது.
கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவை. வழக்கமாக டெத் ஓவரை பிராவோதான் வீசுவார். ஆனால், திடீரென ஜடேஜா வீசியது வியப்பாக இருந்தது. அனுபவமான ஜடேஜாவின் ஓவரில் அக்ஸர் படேல், 3 சிக்ஸர்களை விளாசி வெற்றியுடன் ஆட்டத்தை முடித்தார்.
அக்ஸர் படேலின் அச்சமில்லாத, பதற்றப்படாத ஷாட்கள்தான் டெல்லி அணிக்கு வெற்றித் தேடித்தந்தன. ஷிகர் தவணும் நம்பிக்கை வைத்து ஸ்ட்ரைக்கை அக்ஸர் படேலிடம் கொடுத்தார். தன் மீதான நம்பிக்கையை உறுதி செய்த அக்ஸர், 3 அருமையான சிக்ஸர்களை ஜடேஜா பந்தில் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
அக்ஸர் படேல் ஆட்டம் குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் அளித்த பேட்டியில் கூறுகையில் “ கடைசி ஓவர் வந்ததும் எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. என்ன சொல்வதென்று தெரியவில்லை.ஆனால், தவண் களத்தில் இருக்கும் வரை அணி வெற்றி பெறும் என மட்டும் நம்பினேன்.
அக்ஸர் படேல் கடைசியில் அடித்த சிக்ஸர்கள் அற்புதமானவை. எப்போதெல்லாம் நாங்கள் எங்கள் அணிக்குள் ஆட்டநாயகன் விருது கொடுக்கிறோமோ அப்போதெல்லாம் அக்ஸர் அங்கு இருப்பார்.
அணிக்காக சத்தமில்லாமல் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்துள்ளார் அக்ஸர் படேல், ஆனால் அங்கீகரிக்ப்படாத ஹீரோ. அக்ஸரின் பேட்டிங் பயிற்சி, பந்துவீச்சு பயிற்சி எப்போதும் நுனுக்கமாக, உத்வேகத்தோடு இருக்கும் என்பதால் எந்த சூழலையும் அவர் சமாளிப்பார் எனத் தெரியும்” எனத் தெரிவித்தார்.
ஷிகர் தவண் அளித்த பேட்டியில் “ சிஎஸ்கே பேட்டிங் செய்யும்போதே ஆடுகளம் மெதுவானது எனத்தெரிந்து கொண்டாம். மிகப்பெரிய இலக்கை நாங்கள் துரத்தியபோது, முதல் 6 ஓவர்களில் அடித்து ஆட முயன்றோம். ஆனால், திருதிர்ஷ்டமாக 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டோ். இருப்பினும் அனைவரும் சேர்ந்து அளித்த பங்களிப்பால் இலக்கை துரத்தினோம்.
அக்ஸர் படேல் டெல்லி அணியின் சொத்து. எப்போதெல்லாம் அவரிடம் இருந்து கட்டுக்கோப்பான, நல்ல பந்துவீச்சு தேவை என்று கேட்கிறோமோ அப்போது சிறப்பாகப் பந்துவீசக்கூடியவர். குறைவாக ரன்களை விட்டுக் கொடுத்து விக்கெட் எடுக்கும் திறமை கொண்டவர் அக்ஸர். சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்துவிட்டார்.
மகிழ்ச்சியாக இருக்கிறது, அனைவரும் தங்களின் பங்களிப்பை சிறப்பாகச் செய்துள்ளார்கள். இது அடுத்தக் கட்டத்துக்குச் செல்வதற்கான நல்லஅறிகுறி” எனத் தெரிவித்தார்.