Published : 17 Oct 2020 04:39 PM
Last Updated : 17 Oct 2020 04:39 PM

தொடக்கத்தில் இறங்கி விளாசித்தள்ளிய உத்தப்பா; வாங்கிக்கட்டிக் கொண்ட சுந்தர், சைனி- ஹாட்ரிக் வாய்ப்பில் ராஜஸ்தானை இறுக்கிய சாஹல் 

ராயல்ஸ் பேட்ஸ்மென்கள் ராபின் உத்தப்பா, சஞ்சு சாம்சன்.

துபாயில் சற்று முன் தொடங்கிய ஐபிஎல் 2020-ன் 33வது போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விராட் கோலியின் ஆர்சிபிக்கு எதிராக முதலில் பேட் செய்ய முடிவெடுத்து ஆடிவருகிறது.

ஸ்மித்-சாம்சன், பட்லர்-ஸ்மித், ஸ்டோக்ஸ்-பட்லர் என்று பல தொடக்க சேர்க்கைகளுக்குப் பிறகு இன்று ஸ்மித் எடுத்த முடிவு நல்ல பலன் அளித்தது. ராபின் உத்தப்பாவையும் பென் ஸ்டோக்சையும் தொடக்கத்தில் களமிறக்கினார்.

ராபின் உத்தப்பா தனது பழைய தொடக்க நிலைக்குத் திரும்பியதில் குஷியாகி விட்டார் போலும். ஆர்சிபி அணி தன் முந்தைய உத்தியான வாஷிங்டன் சுந்தரையே தொடக்க ஓவரை வீசச் செய்தது.

முதல் ஓவரில் சுந்தர் 2 ரன்களையே விட்டுக் கொடுத்தார், அடுத்த ஓவரில் மோரிஸ் 3 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

முதல் ஓவரில் 2 ரன்கள்தானே கொடுத்தார் என்று விராட் கோலி வாஷிங்டன் சுந்தரை 3வது ஓவரில் பந்து வீச அழைக்க, உத்தப்பா தன் ரேஞ்ச் ஷாட்களை காட்டத் தொடங்கினார், முதல் பந்து சற்றே ஒதுங்கி மிட் ஆஃபில் பளார்.. நான்கு ரன்கள். அடுத்த பந்து ஸ்வீப் 4 ரன்கள். பிறகு மீண்டும் ஒரு ஸ்வீப் பவுண்டரி. பிறகு ஆஃப் ஸ்டம்பிற்கு ஒதுங்கிக் கொண்டு மீண்டும் ஆன் திசையில் ஒரு பவுண்டரி என 4 பவுண்டரிகளை விளாசி சுந்தரை பந்து வீச்சிலிருந்து அகற்றினார் உத்தப்பா.

அதே போல் சைனியை 2 ஒவர்களில் 3 பவுண்டரிகளை விளாசினார் உத்தப்பா, மேலும் உதனாவை லாங் மேல் ஒரு சிக்ஸ் விளாசி அருமையாக ஆடினார். இதற்குள் ஸ்டோக்ஸ் 15 ரன்களில் மோரிஸிடம் ஆட்டமிழந்து வெளியேறினார், சஞ்சு சாம்சன் உத்தப்பாவுடன் இணைந்தார்.

வாஷிங்டன் சுந்தர் 2 ஓவர்களில் 18 ரன்களையும் நவ்தீப் சைனி 2 ஓவர்களில் 19 ரன்களையும் கொடுத்தனர், சாஹல் வந்தவுடன் ஒரு சிக்ஸ் அடித்தார் சாம்சன்.

ஆனால் அதே ஓவரில் சாஹல் திருப்பு முனை ஏற்படுத்தினார். பந்தை மெதுவாக வீசி உத்தப்பாவை ஸ்வீப் ஷாட்டுக்காக ரொம்பவும் ரீச் செய்ய வைத்து கேட்ச் ஆக்கி வெளியேற்றினார். ராபின் உத்தப்பா தொடக்கத்தில் இறங்கி தன் பங்கை சரியாகச் செய்து வெளியேறினார், அவர் 22 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து 186.36 என்ற அபார ஸ்ட்ரைக் ரேட்டில் சாஹலிடம் வெளியேறினார்.

உத்தப்பா ஷாட் டீப்பில் கேட்ச் ஆனதால் சாம்சன் கிராஸ் செய்தார், ஆனால் அவர் கிராஸ் செய்தது விதி அவரை கிராஸ் செய்தது போலாகி விட்டது, அடுத்த பந்தே வைடாகச் சென்ற பந்தை சிங்கிள் எடுப்பதா, அடிப்பதா என்ற இரட்டை மனநிலையில் இரண்டையும் செய்யாமல் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளைச் சாய்த்து ஹாட்ரிக் வாய்ப்புப் பெற்றார் சாஹல். ஆனால் ஹாட்ரிக் சாதிக்க முடியவில்லை. 6 ஓவர்களில் 52/1 என்ற நல்ல பவர் ப்ளே தொடக்கம் கண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் சடுதியில் 69/3 என்று தடுமாறத் தொடங்கியது.

தற்போது பட்லர் (19), ஸ்மித் (7) மறுக்கட்டுமானத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாஹல் 3 ஒவர் 16 ரன்கள் 2 விக்கெட்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x