

தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து கேப்டன்ஷிப் எனக்கு எந்தவிதமான சர்ச்சையும் இன்று சுமுகமாகவே வந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.
அபுதாபியில் நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நடப்பதற்கு சில மணி நேரத்துக்குமுன் கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகினார். இதைத் தொடர்ந்து கேப்டன் பொறுப்பு மோர்கனிடம் தரப்பட்டது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. 149 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை. 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 6-வது விக்கெட்டுக்கு கம்மின்ஸ், மோர்கன் ஜோடி அணியை மீட்டது.
இந்தத் தோல்வி குறித்து மோர்கன் போட்டி முடிந்தபின் கூறியதாவது:
“தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து கேப்டன்ஷிப் எனக்கு எந்தவிதமான சர்ச்சையும் இன்றி சுமுகமாகவே வந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன். கேப்டன் பதவியை வேண்டாம் என்று சொல்வதற்கு கார்த்திக்கிற்கு ஏராளமான துணிச்சல் தேவை. சுயநலமில்லாமல் அணிக்காக கேப்டன் பதவியிலிருந்து விலகி மீதமுள்ள போட்டிகளில் பேட்டிங்கில் கவனம் செலுத்தப்போகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
நான் கேப்டனாக இப்போதுதான் பொறுப்பேற்றுள்ளேன். எனக்கு அணியை வழிநடத்திச் செல்ல சிறந்த வாய்ப்பு. ஆனால், எங்கள் அணிக்குள் ஏராளமான தலைமைப் பண்பு உள்ள வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அணியின் வளர்ச்சிக்கும் தேவை. பேட்டிங்கில் நாங்கள் சில தவறுகளைச் செய்துவிட்டோம். மும்பை அணி சிறப்பாகப் பந்துவீசினார்கள்.
அதனால்தான் நாங்கள் முதலிடத்தில் இருக்கிறோம், சாம்பியனாக இருக்கிறோம் என்பதை அவர்கள் நிரூபித்துவிட்டனர். இந்தப் போட்டியிலிருந்து நாங்கள் எங்கள் தவறுகளை உணர்ந்து அதைச் சரிசெய்வோம். தற்போது போட்டித் தொடரின் பாதிக்கட்டத்தைக் கடந்துவிட்டோம். சாதகமான விஷயங்களைச் செய்வதற்கு இதைவிட சிறந்த நேரம் ஏதும் இல்லை''.
இவ்வாறு மோர்கன் தெரிவித்தார்.