Published : 17 Oct 2020 01:34 PM
Last Updated : 17 Oct 2020 01:34 PM

தினேஷ் கார்த்திக்கின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது; எந்த வீரரும் நடுவழியில் அணியை விட்டுச் செல்லமாட்டார்: ஆகாஷ் சோப்ரா விளாசல்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர் தினேஷ் கார்த்திக் : கோப்புப்படம்

துபாய்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது. தாமாகப் பதவி விலகுகிறேன் என்று அவரைச் சொல்ல வைத்துள்ளார்கள். எந்த வீரரும் தனது அணியை நடுவழியில் விட்டுச் செல்லமாட்டார் என்று வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தினேஷ் கார்த்திக் நேற்று திடீரென பதவி விலகியதாக கொல்கத்தா அணி நிர்வாகம் அறிவித்தது. தினேஷ் கார்த்திக் தலைமையில் கொல்கத்தா அணி நடப்பு சீசனில் 7 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 4-வது இடத்தில் கவுரவமாகத்தான் உள்ளது.

இருப்பினும் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் கவனம் செலுத்த விரும்புவதாகக் கூறி, பதவியிலிருந்து விலகினார். மோர்கன் புதிய கேப்டனாக பொறுப்பு ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இது சமூக ஊடகங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி, தினேஷ் கார்த்திக்கு ஆதரவாகக் குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா யூடியூப் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்களைத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

''எனக்குத் தெரிந்தவரை, நான் கேள்விப்பட்டவரை தினேஷ் கார்த்திக் தாமாக முன்வந்து கேப்டன் பதவியிலிருந்து விலகவில்லை. அணி நிர்வாகம் தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து கேப்டன் பதவியைப் பறித்துள்ளது. ஆனால், அணி நிர்வாகம் வெளியிட்ட செய்தியில் தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியில் தொடர விரும்பவில்லை, பேட்டிங் மீது கவனம் செலுத்தப்போகிறார் என்று தெரிவித்தது.

ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு நேர்மையான வீரரும், கேப்டனும் ஒரு போட்டித் தொடரில் நடுவழியில் தனது அணியை விட்டுச் செல்லமாட்டார். அதனால்தான் சொல்கிறேன். தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது. நான் இதுவரை கார்த்திக்கிடம் பேசவில்லை. ஆனால், நமக்கு வந்த செய்திகள் அனைத்தும் தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியை வேண்டாம் எனச் சொல்லிவிட்டார் என்றுதான் வந்தது.

நடந்துவரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி தினேஷ் கார்த்திக் தலைமையில் சிறப்பாகத்தானே செயல்பட்டது. 7 போட்டிகளில் 4 ஆட்டங்களில் வென்றிருந்தார்கள். மீதமுள்ள போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்றாலே சூப்பர் லீக் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடலாமே.

பேட்டிங்கிலும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மோசமாகச் செயல்பட்டார் எனச் சொல்லிவிட முடியாது. கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்தார். அவ்வாறு இருக்கும் போது பேட்டிங்கில் கவனம் செலுத்தப்போகிறேன் எனக் கூறி அவர் ஏன் கேப்டன் பதிவியிலிருந்து விலக வேண்டும். எனக்குத் தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை கொல்கத்தா அணி நிர்வாகம் கேப்டன் பொறுப்பை மோர்கனிடம் கொடுக்க முடிவு செய்திருந்தால், போட்டித்தொடரின் தொடக்கத்திலேயே வழங்கியிருக்க வேண்டும். நீங்கள் தொடரின் நடுவழியில் கேப்டன் பதவியைக் கார்த்திக்கிடம் இருந்து பறித்து மோர்கனுக்கு வழங்கினால், பல மோசமான விளைவுகள் அணிக்குள் ஏற்படும். இது என்னுடைய தனிப்பட்டகருத்து''.

இவ்வாறு ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x