

ஐபிஎல் 2020-ல் தொடக்கம் முதலே சர்ச்சைகள்தான், ரெய்னா வெளியேறியது, சிஎஸ்கே அணியில் அதற்குரிய மாற்று வீரரை அறிவிக்காதது, ஹர்பஜன் விலகியது என்று தொடங்கி தற்போது தொடர் பாதி நடந்து கொண்டிருக்கும் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன்சியை தினேஷ் கார்த்திக்கிடமிருந்து பிடுங்கி மோர்கனிடம் அளித்து இன்னொரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
பேட்டிங்கில் கவனம் செலுத்தப் போவதாக கேப்டன்சியிலிருந்து விலகுகிறேன் என்று கார்த்திக் தெரிவித்தாலும் அவருக்கு நெருக்கடி அளிக்கப்பட்டது என்பது தற்போது கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு தெரிவித்த கருத்திலிருந்து தெரியவருகிறது:
“கிரிக்கெட் என்பது உறவுகள் பற்றியதல்ல, அது ஆட்டத்திறன் பற்றியது. மோர்கனால் பெரிய அளவில் மாற்றி விட முடியாது. தொடரின் ஆரம்பத்திலேயே மோர்கனிடம் கேப்டன்சியை அளித்திருந்தால் ஏதாவது செய்திருக்க முடியும். தொடரின் நடுவில் யாரும் கேப்டனை மாற்ற மாட்டார்கள். பயிற்சியாளருக்கும் கேப்டனுக்கும் நல்ல உறவு இருப்பது நல்லதுதான் ஆனால் உறவுகள் முக்கியமல்ல்ல கிரிக்கெட் என்பது ஆட்டத்திறன் பற்றியது.
2 ஆண்டுகளாக தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருக்கிறார், நட்டநடுவில் அவரை மாற்றுவார்களா? கேகேஆர் அணி அந்த அளவுக்கு மோசமாகவும் இல்லை, கேப்டனை மாற்றும் அளவுக்கு மோசமாக இல்லை, எனவே இந்த மாற்றம் எனக்கு ஆச்சரியமளிக்கிறது.
கேகேஆர் கேப்டனை மாற்ற வெண்டுமென்றால் தொடரின் ஆரம்பத்திலேயே மாற்றியிருக்க வேண்டும். உலகக்கோப்பை வென்ற கேப்டன் (மோர்கன்) நம்மிடையே இருக்கிறார் என்பதற்காக அதிகம் பேசிப் பேசி தினேஷ் கார்த்திக் போன்ற ஒருவருக்கு நெருக்கடி கொடுப்பதா? நேரடியாக மோர்கனிடம் அளிக்க வேண்டியதுதானே? ஏன் கார்த்திக்கிற்கு அதிக நெருக்கடி அளிக்க வேண்டும்?
அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்த விரும்புகிறேன் என்று கூறுவது நல்ல விஷயம்தான் ஆனால் உண்மை என்னவெனில் அணியினர் கார்த்திக் மீது ஏமாற்றமடைந்தார்களோ இல்லையோ, நிர்வாகம் அத்தகைய ஒன்றை தொடர்ந்து சூசகமாக தெரிவித்துக் கொண்டிருக்கும் எனவே இது துரதிர்ஷ்டவசமானது” இவ்வாறு கூறினார் கம்பீர்.