நியூஸி தொடர்; மே.இ.தீவுகள் டெஸ்ட் அணியில் மீண்டும்  பிராவோ, ஹெட்மயருக்கு இடம்: டி20 அணிக்கு பொலார்ட் கேப்டன்

மே.இ.தீவுகள் வீரர் கெய்ரன் பொலார்ட் : கோப்புப்படம்
மே.இ.தீவுகள் வீரர் கெய்ரன் பொலார்ட் : கோப்புப்படம்
Updated on
2 min read

நியூஸிலாந்துக்கு எதிரான் டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மீண்டும் டேரன் பிராவோ, ஷிம்ரன் ஹெட்மயர், ஆல்ரவுண்டர் கீமோ பால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதேசமயம், ஷாய் ஹோப் நீக்கப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்து நாட்டுக்கு நவம்பர் மாதம் பயணம் மேற்கொள்ளும் மே.இ.தீவுகள் அணி 3 டி20 போட்டிகளிலும், 2 டெஸ்ட் தொடரிலும் விளையாடுகிறது. இதற்கான மே.இ.தீவுகள் அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இதில் மே.இ.தீவுகள் அணியில் நீண்டநாட்களாக ஒதுக்கப்பட்டிருந்த டேரன் பிராவோ மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு நியூஸி. தொடரில் டூனாடின் நகரில் 218 ரன்கள் சேர்த்தார் பிராவோ. நியூஸிலாந்தில் சிறப்பாக விளையாடக்கூடியவர் என்பதால், அவர் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார்.

அதேசமயம், மே.இ.தீவுகள் அணியுடன் 6 ரிசர்வ் வீரர்களும் உடன் பயணிக்கின்றனர். வீரர்களுக்குப் பயிற்சியின்போது காயம் ஏற்பட்டால் மாற்று வீரர்களாகக் களமிறங்குவார்கள்.

கடந்த 2018-ம் ஆண்டுக்குப் பின் மே.இ.தீவுகள் அணியில் இடம் பெறாத விக்கெட் கீப்பர் ஆன்ட்ரே ப்ளெட்சர் இந்த முறை டி20 அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கரிபீயன் லீக்கில் சிறப்பாகச் செயல்பட்ட ஆல்ரவுண்டர் கைல் மேயர்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ ரஸல், லின்டல் சிம்மன்ஸ், எவின் லூயிஸ் ஆகியோர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தத் தொடரில் பங்கேற்க விருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டதால், அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

முதல் டி20 போட்டி நவம்பர் 27-ம் தேதி ஆக்லாந்திலும், 29-ம் தேதி மவுன்ட் மவஹ்கானியில் 2-வது போட்டியும், 30-ம் தேதி அதே மைதானத்தில் 3-வது போட்டியும் நடக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 3 முதல் 7-ம் தேதி வரை ஹேமில்டனிலும், 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 11 முதல் 15-ம் தேதிவரை வெலிங்டனிலும் நடக்கிறது.

டெஸ்ட் அணி விவரம்:

ஜேஸன் ஹோல்டர் (கேப்டன்), ஜெர்மன் பிளாக்வுட், கிரெய்க் பிராத்வெய்ட், டேரன் பிராவோ, ஷமரா ப்ரூக்ஸ், ஜான் கேம்பெல், ரஸ்டன் சேஸ், ரக்கீம் கார்ன்வெல், ஷேன் டோவ்ரிச், ஷேனன் கேப்ரியல், ஷிம்ரன் ஹெட்மயர், செமமர் ஹோல்டர், அல்சாரி ஜோஸப், கீமோ பால், கீமர் ரோச்.

ரிசர்வ் வீரர்கள்:

குருமா போனர், ஜோஸ்வா டாசில்வா, பிரஸ்டன் ஸ்வீன், ஷேனே மோஸ்லி, ரேமன் ரீவர், ஜெடன் சீஸ்லன்

டி20 அணி:

கெய்ரன் போலார்ட்(கேப்டன்), ஃபேயன் ஆலன், டுவைன் பிராவோ, ஷெல்டன் காட்ரெல், ஆன்ட்ரே பிளெட்சர், ஷிம்ரன் ஹெட்மயர், பிரன்டன் கிங், கைல் மேயர்ஸ், ரோவ்மன் பாவெல், கீமோ பால், நிகோலஸ் பூரன், ஓஸ்னே தாமஸ், ஹேடன் வால்ஷ் ஜூனியர், கெஸ்ரிச் வில்லியம்ஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in