Last Updated : 16 Oct, 2020 02:41 PM

 

Published : 16 Oct 2020 02:41 PM
Last Updated : 16 Oct 2020 02:41 PM

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தினேஷ் கார்த்திக் திடீர் விலகல்: மோர்கனிடம் பதவி ஒப்படைப்பு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் விலகியுள்ளார். அதற்குப் பதிலாக கேப்டன் பொறுப்பை இங்கிலாந்து அணியன் கேப்டன் இயான் மோர்கன் ஏற்க உள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் இன்று நடக்க இருக்கும் நிலையில் இந்த கேப்டன்ஷிப் மாற்றம் நடந்துள்ளது.

ஐபிஎல் டி20 தொடர் 2-வது பாதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. எந்த 4 அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்குச் செல்லும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தற்போது, 7 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகள், 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.

கொல்கத்தா அணி வெற்றி பெற்ற 4 போட்டிகளிலும் தினேஷ் கார்த்திக்கு உதவியாக ஃபீல்டிங் செட் செய்ததிலும், தேவையான ஆலோசனைகள் வழங்கியதிலும் இங்கிலாந்து கேப்டன் மோர்கனின் பங்கு முக்கியமானது. அதை தினேஷ் கார்த்திக்கே ஒப்புக்கொண்டு பேட்டி அளித்திருந்தார்.

மேலும், இந்தத் தொடரில் தினேஷ் கார்த்திக் ஒரு போட்டியில் மட்டுமே அரை சதம் அடித்துள்ளார். மற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை. சிஎஸ்கே அணிக்கு எதிராக வெற்றி பெற்ற ஆட்டத்தில் கூட மோர்கனின் ஆலோசனைகள்தான் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு உதவின.

தினேஷ் கார்த்திக் கேப்டன் பொறுப்பை மோர்கனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரும் வலியுறுத்தியிருந்தார். அது தொடர்பான பேச்சுகளும் சமூக ஊடகங்களில் ஓடியநிலையில் தினேஷ் கார்த்திக் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் அளித்த பேட்டியில், “நான் பேட்டிங்கில் கவனம் செலுத்தப்போகிறேன். அணியின் வெற்றிக்கு அதிகமாகப் பங்களிக்கப் போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா அணியின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கி மைசூர் விடுத்த அறிக்கையில், “அணியை முன்னோக்கி நடத்திச் சென்ற தினேஷ் கார்த்திக் போன்ற கேப்டன் விலகியது துரதிர்ஷ்டம். அணியை வழிநடத்திச் செல்ல ஏராளமான துணிச்சலும், முடிவு எடுக்கும் திறனும் தேவை. கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் அவருடைய முடிவு எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரின் விருப்பங்களை நாங்கள் மதிக்கிறோம்.

தினேஷ் கார்த்திக், மோர்கன் இருவரும் சிறப்பாக இந்தத் தொடரில் பணியாற்றியுள்ளார்கள். ஆதலால், மோர்கன் கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக தினேஷ் கார்த்திக் அணிக்கு கேப்டனாகப் பங்களிப்பு செய்துள்ளார். அதை மோர்கனும் தொடர்வார்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x