

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் பவுலர் கலீல் அகமெட், சிஎஸ்கே ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ விக்கெட்டை வீழ்த்தி அதைக் கொண்டாடினார்.
இதனையடுத்து நெட்டிசன்கள் அவரை வம்புக்கு இழுத்தனர், ‘பிராவோவுக்கு மரியாதை கொடுங்கள்’, சிரிப்பதா? என்ற ரீதீயில் அவரைப் போட்டு உலுக்கி எடுத்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பலவீனமான சன்ரைசர்ஸ் அணியை செவ்வாயன்று வீழ்த்தியது, இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை அளித்தது, இருந்தாலும் பிராவோவை இப்படிச் செய்யலாமா என்று கொதித்தனர் இதே பிராவோ சர்வதேச போட்டியில் தோனியையோ கோலியையோ வீழ்த்தி விட்டு கொண்டாடினால் பிராவோவை வைத்துச் செய்யக் கூடியவர்கள்தான். ஆனால் சிஎஸ்கே அணிக்கு பிராவோ ஆடும்போது அவரை வீழ்த்தி விட்டு பவுலர் கொண்டாடலாமா? அது எவ்வளவு பெரிய தவறு என்று கலீல் அகமதுவுக்கு எதிராகக் கிளம்பிவிட்டனர்.
சென்னை பேட்டிங் ஆடும்போது கடைசி ஓவரில் டிவைன் பிராவோ இறங்கினார். ஆனால் ஹைதராபாத் பவுலர் கலீல் அகமது அவரை வீழ்த்தினார். முதல் பந்திலேயே வந்த வேகத்தில் டக் அவுட் ஆனார் பிராவோ. கலீல் அகமெட் பந்தை லாங் ஆன் மேல் தூக்கி அடிக்கப் போனார் பிராவோ, ஆனால் பந்து ஸ்டம்பைத் தாக்கியது.
இந்த விக்கெட்டைக் கொண்டாடிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமெட் ஒரு சிரிப்புச் சிரித்தார்.
இதுதான் நெட்டிசன்களுக்குப் பிடிக்கவில்லை, ‘பிராவோவை மரியாதை இல்லாமல் இப்படி செய்யலாமா?’என்று ஆதங்கப்பட்டனர்.
இதனையடுத்து அக்டோபர் 15ம் தேதியன்று கலீல் அகமெட், ‘நான் டிவைன் பிராவோ அவுட் ஆனதற்காகச் சிரிக்கவில்லை. மாறாக நான் வேறு காரணங்களுக்காகச் சிரித்தேன். பிராவோ ட்ரூ லெஜண்ட், அவர் எனக்கு அண்ணா மாதிரி’ என்று பதில் கூறியிருந்தார். ஆனால் இந்த ட்வீட் பிறகு நீக்கப்பட்டிருந்தது.
அன்று ராகுல் திவேத்தியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலீல் அகமெட் சர்ச்சையில் சிக்கிய தருணத்திலிருந்தே ரசிகர்களின் கசப்புணர்வை அவர் சம்பாதித்துக் கொண்டார்.