

இந்த ஐபிஎல் தொடரில் முதல் 6 ஓவர்கள் என்ற அக்னிப்பரிட்சை பவர் ப்ளேயில் ஒரு ஸ்பின்னராக அபாரமாக வீசி சிக்கனம் காட்டியதோடு விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆர்சிபி அணிக்கு ஒரு நல்ல பவுலிங் தொடக்கம் கொடுத்தவர்தான் வாஷிங்டன் சுந்தர்.
தற்காலக் கேப்டன்களின் அசட்டுத்தனமான ஒரு யோசனையான வலது கை பேட்ஸ்மென்களுக்கு ஆஃப் ஸ்பின் பவுலிங்கைக் கொடுக்கக் கூடாது என்ற யோசனையினாலும் ஏதோ இடது கை பேட்ஸ்மெனை ஆஃப் ஸ்பின்னர்கள் கிரிக்கெட் வரலாறு நெடுக தட்டிப் போட்டு எடுத்து விட்டது போலவும் ஒரு மூடநம்பிக்கையில் செயல்படுகின்றனர்.
சரி பேட்ஸ்மெனின் கை வாகுக்கு எதிர்த்திசையில் குறுக்காக ஸ்பின் ஆகும் பந்துகளை ஆடுவது கடினமாக இருக்கலாம், அதற்காக ஆஃப் ஸ்பின் பந்துகளில் வலது கை வீரர்கள் ஆட்டமிழக்க மாட்டார்கள் என்பதோ, லெக் ஸ்பின் பவுலர்கள் வீசினால் வலது கை வீரர்கள் அவுட் ஆகி விடுவார்கள் என்பதோ, முடிந்த முடிவுகள் அல்ல. லெக் ஸ்பின் வீச்சில் இடது கை பேட்ஸ்மென்கள் அவுட் ஆக மாட்டார்கள், ரன் குவித்து விடுவார்கள் என்பதோ கேப்டன்களின் ஒரு மூடநம்பிக்கைதான்.
இப்படித்தான் நேற்று ராகுல், மயங்க் அகர்வால் வலது கை தொடக்க வீரர்கள் இவர்களுக்கு எதிராக ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தரை காட்ட வேண்டாம் என்று விராட் கோலி அவரை 9வது ஓவருக்குக் கொண்டு வந்தார். அதாவது கிறிஸ் கெய்ல் இடது கை பேட்ஸ்மென் அவருக்கு ஆஃப் ஸ்பின் வீசினால் வீழ்த்தலாம் என்பது கோலியின் திட்டம். பவர் ப்ளேயில் இதே மூடநம்பிக்கை நாணயத்தின் இன்னொரு பக்கமான வலது கை பேட்ஸ்மென்களுக்கு லெக் ஸ்பின் கடினமாக இருக்கும் என்று கருதி சாஹலைக் கொண்டு வந்ததும் பெரிதாக கோலிக்குப் பயனளிக்கவில்லை.
ஆனால் வாஷிங்டன் சுந்தர் எந்த இடத்திலும் பந்து வீசக்கூடிய தனித்திறமையும் நம்பிக்கையும் தைரியமும் படைத்தவர் என்பதால் கிறிஸ் கெய்லுக்கும் வீசினார். கெய்ல் நீண்ட நாட்கள் சென்று பேட் செய்ய வந்ததால் கொஞ்சம் பொறுமை காட்டினார், 15 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தார். அவர் திணறினார் என்பதல்ல, முதல் போட்டியில் சொதப்பி விடக்கூடாது, நம் மேல் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதால் பொறுமை காத்தார். வாஷிங்டன் சுந்தர் 2 ஓவர்களில் 8 ரன்கள்தான் கொடுத்தார்.
ஆனால் சுந்தர் வீசிய 3வது ஓவரில் கெய்ல் முதலில் பவுலர் தலைக்கு மேலாக ஒரு தூக்கு தூக்கி சிக்ஸ் விளாசினார். இதே ஓவரில் நடந்து வந்து ஒரு கால் முட்டியை மடக்கி ஸ்கொயர் லெக்கில் இன்னொரு சிக்ஸ் விளாசினார். சுந்தர் 3 ஓவர்கள் 24 ரன்கள்.
தொடர்ந்து சுந்தருக்கே கொடுத்துப் பார்த்திருந்தால் ஏதாவது செய்து அவர் கெய்லை வீழ்த்திக் கூட இருக்கலாம், ஆனால் இரண்டு சிக்ஸ் என்றவுடன் கோலி பயந்து போய் கட் செய்தார், பிறகு 17வது ஓவரில் சுந்தரைக் கொண்டு வந்தார். ஆனால் முதல் பந்தே லாங் ஆனில் சிக்ஸ் பறந்தது. மீண்டும் இதே ஓவரில் மீண்டும் லாங் ஆன் மேல் ஒரு சிக்ஸ். 2 ஓவர்களில் 8 ரன்கள் கொடுத்திருந்த சுந்தர் 4 சிக்சர்களை கெய்ல் விளாச 4 ஓவர் 38 என்று முடிந்தார். இப்படியாக சுந்தரை கோலி விரயம் செய்தார்.
ஒருவேளை பவர் ப்ளேயில் ராகுல் அல்லது அகர்வால் ஆகிய இருவரில் ஒருவரை வீழ்த்தியிருந்தால் அந்த நிலையில் கெய்ல் இறங்கி இவரை எதிர்கொள்ள பதற்றம் அடைந்திருப்பார், அதைப் பயன்படுத்தி அவரை வீழ்த்தியிருக்கலாம். ஆனால் கோலி மிஸ் த ட்ரிக், கெய்ல், வாஷிங்டன் சுந்தர் நகர்த்தலை முறியடித்தார்.