

தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் சிஎஸ்கே அணியில் ஐபிஎல் அரங்கில் அன்று பெங்களூரு அணிக்கு எதிராக அறிமுகப் போட்டியில் களமிறங்கினார். 28 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அடுத்த போட்டியிலேயே ஜெகதீசன் நீக்கப்பட்டார்.
இது குறித்து தோனி கூறும்போது, “ஒரு இந்திய பேட்ஸ்மென் சிறப்பாக விளையாடாத நிலையில் கூடுதலாக சுழற்பந்து வீச்சாளர்தான் தேவைப்பட்டது.
ஜெகதீசனை 7,8-ம் நிலையில் களமிறக்குவது சரியாக இருக்காது” என்று விளக்கமளித்தார்.
தமிழக வீரர் பாபா அபராஜித் மற்றும் நாது சிங் கதை:
2012 யு-19 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் உன்முக்த் சந்த் தலைமையிலான இந்திய அணியில் பெரிய அளவில் வெளிச்சத்திற்கு வந்தவர் பாபா அபராஜித், இந்திய அணி யு-19 உலகக்கோப்பையை வென்றது..
இதில் காலிறுதி, அரையிறுதியில் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார் பாபா அபராஜித். யு19 உலகக்கோப்பைக்கு சில மாதங்களுக்கு முன்புதான் அவர் தமிழக அணிக்கு 17வயதில் அறிமுகமானார்.
இந்நிலையில் பேட்டிங், பவுலிங் திறமைகள் உள்ள அபராஜித் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். பிறகு சிஎஸ்கே அணிக்கு தடை விதிக்கப்பட்ட போது ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் ஐபிஎல் அணியிலும் தேர்வு செய்யப்பட்டார், இரண்டுமே தோனியின் தலைமையில்தான். ஆனால் ஒரு போட்டியில் கூட பிளேயிங் லெவனில் களமிறக்கப்படவில்லை.
இரண்டு சீசன்களில் அவர் அணியில் இருந்தும் களமிறக்கப்படவில்லை. இன்னும் இவரைப்போல் ஒரு போட்டியில் கூட களமிறக்கப் படாத வீரர்கள் உள்ளனர். ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்படும் சிறந்த வீரர்கள் உள்ளனர்.
ரஜ்னீஷ் குர்பானி என்ற விதர்பா வேகப்பந்து வீச்சாளர் இந்த ரகத்தைச் சேர்ந்தவர். இவர் பிரமாதமான இன்ஸ்விங் பவுலர். உள்நாட்டு கிரிக்கெட்டில் நல்ல சாதனை புரிந்தும் ஐபிஎல் உரிமையாளர்களாலும் கேப்டன்களாலும் கண்டுகொள்ளப்படவில்லை.
அதேபோல் நாது சிங் என்ற நல்ல உடல் அமைப்பு கொண்ட வேகப்பந்து வீச்சாளர் மும்பை இந்தியன்ஸ் அணியினால் ரூ.3.2 கோடிக்கு 2016-ல் ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. ஓராண்டுக்குப் பிறகு இவர் குஜராத் லயன்ஸ் அணிக்காக ஆடினார், அப்போதும் 2 போட்டிகள்தான் இவரது ஐபிஎல் வாழ்வு. 2 போட்டிகளில் 4 ஓவர்கள் வீசி 15 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றினார். ஆனால் இப்போது ஐபிஎல் அரங்கில் இவர் பெயர் காணாமல் போய்விட்டது.
ஐபிஎல் ஆடி பெரிய அளவில் பிரபலமடைந்து இந்திய அணிக்குள் நுழையும் வீரர்களை விட திறமையிருந்தும் காணாமல் அடிக்கப்படும் வீரர்கள் எண்ணிக்கையே அதிகம் என்று தோன்றுகிறது.
ஐபிஎல் அணிகளில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் 2 பேர் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்பதை விதியாக உருவாக்க வேண்டும். அப்போதுதான் திறமையான உள்நாட்டு வீரர்களுக்கு சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்.