Last Updated : 15 Oct, 2020 07:44 AM

 

Published : 15 Oct 2020 07:44 AM
Last Updated : 15 Oct 2020 07:44 AM

156 கி.மீ. வேகம், பவுலர்களுக்கான யுத்தம்: ராஜஸ்தானை அடக்கி டெல்லி மீண்டும் முதலிடம்: அதிர வைத்த ஆர்ச்சர்: பதிலடி கொடுத்த ஆன்ரிச், ரபாடா 

பந்துவீச்சாளர்களுக்கான யுத்தம் என்றுதான் இந்த ஆட்டத்தைக் கூற முடியும். இரு அணியின் வேகப்பந்துவீச்சாளர்களும் ‘உன் வேகம் பெரிதா’, ‘என் வேகம் பெரிதா’ என போட்டிபோட்டு வீசியதால் பாவம் பேட்ஸ்மேன்கள் திணறினர். ஆர்ச்சர் 150 கி.மீ வேகத்தில் வீச, நார்ஜே 156 கி.மீ வேகத்தில் வீசி பதிலடி கொடுத்தார்.

ஒரு அணி எந்த நிலையில் இருந்தாலும், விடாமுயற்சியுடன் போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதற்கும் இந்த ஆட்டம்தான் உதாரணம். அதிலும் 15 ஓவர்கள் வரை ஆட்டம் ராஜஸ்தான் பக்கம் இருக்க, அடுத்த 5 ஓவர்களில் ஆட்டம் தலைகீழாக மாறி டெல்லி அணி வென்றது டி20 போட்டியில் முடிவு எப்படியும் மாறலாம் என்பதை உணர்த்திவிட்டது..

நார்ஜே, ரபாடாவின் தெறிக்கவிடும் பந்துவீ்ச்சு, தவண், ஸ்ரேயாஸ் அய்யரின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 29-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்்த்தது. 162ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்து 13ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

மீண்டும் முதலிடம்

இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலி்ல் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 8 போட்டிகளில் விளையாடிய டெல்லி அணி 6 வெற்றி, 2 தோல்வி என மொத்தம் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்வி என 6 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது.

பந்துவீச்சாளர்களின் வெற்றி

துபாய் மைதானத்தில் குறைந்தபட்சம் 180 ரன்களுக்கு மேல் அடித்தால்தான் எதிரணியைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலையில் 161 ரன்கள் சேர்த்து, அந்த இலக்கையும் ராஜஸ்தான் அணியை அடையவிடாமல் தடுத்த டெல்லி அணியை பாராட்டலாம். அதிலும் டெல்லி அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கல் ஹெட்மயர், ரிஷப்பந்த், காயத்தால் ஆடாதநிலையில் இந்த அளவு ரன்களைச் சேர்த்துள்ளது.

டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பந்துவீச்சாளர்கள்தான். 161 ரன்கள் இலக்கை ராஜஸ்தான் அணி அடைந்துவிடும் நோக்கில் வேகமாக முன்னேறியபோது, ஆனால், அதன் வேகத்தைத்தடுத்து கடிவாளத்தை தங்கள் கைப்பிடிக்குள் பந்துவீ்ச்சாளர்கள்தான் கொண்டு வந்தனர்.

ஆன்ரிச் ஆட்டநாயகன்

அதிலும் டெல்லி அணியின் ஆன்ரிச் நார்ஜே நேற்று மணிக்கு 156கி.மீ வேகத்தில் பந்துவீசி ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறவிட்டார். பந்து ஆடுகளத்தில் பிட்ச் ஆனபின் பேட்ஸ்மேன் கண்இமைக்கும் நேரத்தில் பந்து கீப்பரிடம் சென்றது. அசுரத்தனமான வேகத்தில் தனது 4 ஓவர்களையும் ஆன்ரிச் வீசினார்.

ஆட்டத்தை மாற்றிய கடைசி 5 ஓவர்கள்

4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்த 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆன்ரிச் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
15 ஓவர்கள் வரை ஆட்டம் ராஜஸ்தான் அணியின் பக்கம்தான் இருந்தது. டெல்லி அணி தோற்றுவிடும் என்று அனைவரும் எண்ணினர். 30 பந்துகளுக்கு 39ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது கைவசம் 5 விக்கெட்டுகள் ராஜஸ்தான் பக்கம் இருந்தன.

ஆனால், அஸ்வின் வீசிய 16-வது ஓவரிலிருந்து ஆட்டம் டெல்லி பக்கம் திரும்பியது. அஸ்வின் அருமையாகப் பந்துவீசி, தனது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து நெருக்கடியைத் தொடங்கினார்.

17-வது ஓவரை வீசிய ரபாடா மணிக்கு 145 முதல் 150 கி.மீ வேகத்தில் வீசி 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் கடைசி 3 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டதால் பேட்ஸ்மேன்கள் நெருக்கடிக்கு ஆளாகினர்.

18-வது ஓவரை நார்ஜே வீசினார். 3-வது பந்தில் உத்தப்பாவுக்கு(32) யார்கர் வீசி க்ளீன் போல்டாக்கி அனுப்பினார். அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 19-வது ஓவரில் ஆர்ச்சர்(1) விக்கெட்டை வீழ்த்திய ரபாடா 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசிஓவரையும் தேஷ்பாண்டே கட்டுக்கோப்பாக வீசய ராஜஸ்தான் தோல்வியைத் தழுவியது.
ஒட்டுமொத்தமாக 16-வது ஓவரிலிருந்துதான் ஆட்டம் டெல்லி அணியின் கைகளுக்கு மாறியது. அதற்கு முக்கியக் காரணம் பந்துவீச்சாளர்கள்தான்.

ரபாடா 4 ஓவரில் 28 ரன்களுக்கு ஒருவிக்கெட், தேஷ்பாண்டே 4 ஓவரில் 3 2ரன்களுக்கு 2 விக்கெட், அஸ்வின் 4 ஓவரில் 17 ரன்களுக்கு ஒரு விக்கெட், அக்ஸர் படேல் 4 ஓவர்களில் 32 ரன்களுக்கு ஒரு விக்கெட் என பந்துவீச்சாளர்கள் தங்கள் பணியை சிறப்பாகச் செய்தனர்.

ராஜஸ்தானின் தவறு

ராஜஸ்தான் அணியைப் பொருத்தவரை முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் தொடக்கத்திலேயே விளையாடி விக்கெட்டுகளை இழந்துவிட்டதால் நடுவரிசைக்கு நிலைத்து ஆடும் பேட்ஸ்மேன்கள் இல்லை. தொடர்ந்து அதே தவறை திரும்பத் திரும்பச் செய்கிறது ராஜஸ்தான் அணி. பஞ்சாப், சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் அணிகள் எல்லாம் ஒரே ரகம். இந்த 3 அணிகளிலும் நடுவரிசைக்கு பேட்ஸ்மேன்களே இல்லை.

ராஜஸ்தான் அணியில் குறைந்தபட்சம் பென் ஸ்டோக்ஸை நடுவரிசையில் இறக்கி, உத்தப்பாவை தொடக்க வீரராக களமிறக்கி இருக்கலாம். ஸ்மித் 3-வது வீரராக களமிறங்குவதற்கு பதிலாக சாம்ஸனுக்கு அடுத்தார்போல் களமிறங்கிஇருந்தால் நடுவரிசை ஓரளவு பலம்பெற்றிருக்கும்.

ஆர்ச்சரின் அடித்தளம்

பந்துவீச்சில் ஆர்ச்சர் அமைத்துக்கொடுத்த அற்புதமான அடித்தளத்தை பேட்ஸ்மேன்கள் தவறவிட்டனர். ஒரு பந்துவீச்சாளராக தன்னால் முடிந்த அளவுக்கும் அதிகமாக ஆர்ச்சர் உழைத்துள்ளார்.

என்ன மாதிரியான பந்துவீச்சு…..அசராமல், அலட்டிக்கொள்ளாமல் படிப்படியாக ஒவ்வொரு பந்தின் வேகத்தை 145கி.மீலிருந்து உயர்த்தி 150 கி.மீ வேகத்தில் ஆர்ச்சர் பந்துவீசுவதைப் பார்க்கவே மிரட்சியாக இருந்தது. தொடக்கத்திலேயே பிரித்விஷா, ரஹானே விக்கெட்டுகளை ஆர்ச்சர் எடுத்துக்கொடுத்தார்.

ஆர்ச்சர் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். ஆனால், அடுத்தடுத்து நெருக்கடி கொடுத்து அடுத்துவந்த பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கலாம். ஆனாலும், 161 ரன்களுக்குள் டெல்லி அணியைச் சுருட்டியதை குறை சொல்ல முடியாது.

பந்துவீச்சாளர்கள் தங்கள் பணியை சிறப்பாகச் செய்தார்கள். மற்ற வகையில் உனத்கத், ஸ்டோக்ஸ் ரன்களை அதிகமாக விட்டுக்கொடுத்தது பின்னடைவு. தியாகி, திவேஷியா, கோபால் மூவரும் கட்டுக்கோப்பாகவே பந்துவீசினர்.

ஆனால், ராஜஸ்தான் அணியின் முக்கிய நட்சத்திர பேட்ஸ்மேன்கள் பட்லர்(22), ஸ்மித்(1), சாம்ஸன்(25), ஸ்டோக்ஸ்(41) யாரேனும் ஒருவர் நிலைத்திருக்கலாம். அவ்வாறு இருந்திருந்தால் ஆட்டம் வெற்றியில் முடிந்திருக்கும்.

156 கி.மீ வேகம்

162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. பட்லர், ஸ்டோக்ஸ் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். பட்லரின் அதிரடி, ஸ்டோக்ஸின் ஸ்மார்டான ஷாட்களால் ஸ்கோர் 10 ரன்ரேட்டில் வேகமெடுத்தது.

நார்ஜே வீசிய 3-வது ஓவரில் சிஸ்கர், இரு பவுண்டரிகளை பட்லர் விளாசினார். ஆனால், அதே ஓவரில் 156 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட கடைசிப்பந்தில் க்ளீன் போல்டாகி பட்லர் 22ரன்னில் (9பந்து 3பவுண்டரி,ஒருசிக்ஸ்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்மித் நிலைக்கவில்லை. அஸ்வின் வீசிய 4-வது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஒரு ரன்னில் ஸ்மித் பெவிலியன் திரும்பினார்.

10ஓவரில்

3-வது விக்கெட்டுக்கு வந்த சாம்ஸன், ஸ்டோக்ஸுடன் சேர்ந்தார். இருவரும் ஓரளவுக்கு நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். 10ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 85ரன்கள் சேர்த்திருந்தது ராஜஸ்தான் அணி. அடுத்த 10 ஓவர்களில் வெற்றிக்கு் 86 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது

ஆனால், 11-வது ஓவரை வீசிய தேஷ்பாண்டே பந்துவீச்சில் ஸ்டோக்ஸ் 41 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து உத்தப்பா வந்தார். அக்ஸர் படேல் வீசிய 12-வது ஓவரில் சாம்ஸன் தவறான ஷாட் அடிக்க முயற்சித்து போல்டாகி 25 ரன்னில் வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு வந்த பராக்கும் நிலைக்காமல் ரன் அவுட் ஆகினார்.

ஆட்டம் திசைதிரும்பியது

இருப்பினும் திவேஷியா, உத்தப்பா ஜோடி ரன்களை சேர்த்து ஆட்டம் தங்களைவிட்டு நழுவாமல் கொண்டு சென்றனர். கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 39ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரிலிருந்து ஆட்டம் மாறத் தொடங்கியது. டெல்லி வீரர்கள் அஸ்வி்ன், நார்ஜே, ரபாடா பந்துவீச்சில் ஆட்டம் முழுவதும் டெல்லி அணியின் கைகளுக்கு சென்றது. உத்தப்பா(32), ஆர்ச்சர்(1), கோபால்(6) ஆட்டமிழக்க ராஜஸ்தான் அணி தோல்வி உறுதியானது. திவேஷியா 14 ரன்னில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே சேர்த்து 13 ரன்னில் தோல்வி அடைந்தது.

ஆர்ச்சர் மிரட்டல்

முன்னதாக டாஸ்வென்ற ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தவண், பிரித்வி ஷா ஆட்டத்தைத் தொடங்கினர். ஆர்ச்சர் வீசிய முதல்ஓவரின் முதல் பந்திலேயே ப்ரிதிவி ஷா க்ளீன் போல்டாகி டக்்வுட்டில் வெளியேறினார். அடுத்து ரகானே களமிறங்கினார்.

ஆர்ச்சரின் அசுரத்தனமாக வேகத்தை தவண், ரஹானே தொடக்கூட முடியவில்லை. பொறுமையாக இருந்த ரஹானே, ஆர்ச்சரின் பந்துவீச்சை அடித்து ஆட முற்பட்டு, 2 ரனில் வெளியேறினார்.

மீட்ட ஜோடி

3-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யர், தவண் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். 3வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். தவண் 57 ரன்கள் சேர்த்து(2சிக்ஸர்,6பவுண்டரி) கோபால் பந்துவீ்ச்சில்ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் 53 ரன்னில் தியாகி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதன்பின் வந்த ஸ்டாய்னிஷ்(18), காரே(14),படேல்(7) ரன்னில் வெளிேயறினர். 153 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த டெல்லி அணி அடுத்த 8ரன்களைச் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

கட்டுக்கோப்பு

ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் கடைசி 3 ஓவர்களில் 18 ரன்களையும், கடைசி 5 ஓவர்களில் 32 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர். ஐபிஎல் தொடரிலேயே கடைசி 5 ஓவரில் மோசமாக விளையாடியது டெல்லி அணிதான். ஆர்ச்சரின் வேகத்துக்கு, உனத்கத்,தியாகி துணை புரிந்து கடைசிஓவர்களில் ரன்கள் செல்லாமல் தடுத்தனர்.

20ஓவர்களில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்புக்கு 161ரன்கள் சேர்த்தது. ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், தியாகி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x