

தமிழக இடது கை வேகப்பந்து வீச்சாளர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடி வருகிறார். நேற்றைய சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ‘விலைமதிப்பில்லா’ கேப்டன், ‘தல’ தோனியின் விக்கெட்டை வீழ்த்தி அதிசயிக்க வைத்தார்.
தோனி விக்கெட்டை வீழ்த்துவதை சாதனையாகக் கருதுவேன் என்று அவர் அஸ்வினிடம் அன்று கூறியதை உடனடியாகவே சாதித்தார் நடராஜன்.
சமீபமாக யார்க்கர்கள் இவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கின்றன, சில சமயங்களில் யார்க்கர் முயற்சி ஃபுல்டாசாக மாறி சாத்தும் வாங்குகிறார் என்பதையும் மறுக்க முடியாது.
ஆனால் யார்க்கர்னா பும்ரா, ஷமி, கமின்ஸ், ட்ரெண்ட் போல்ட், ரபாடா, நோர்ட்யே என்று பெரிய பெரிய பவுலர்களைக் குறிப்பிடும் போது தமிழ்நாட்டிலிருந்து ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளரை ‘யார்க்கர் நடராஜன்’ என்று அழைப்பது பெரிய விஷயமே.
நடப்பு ஐபிஎல் தொடரில் நடராஜன் 27 யார்க்கர்களை வீசியுள்ளார், பும்ரா 17 யார்க்கர்களையும் பிராவோ, ஷமி முறையே 9 யார்க்கர்களையும் வீசியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று துபாயில் நடந்த போட்டியில் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி 13 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சர் என்று 21 ரன்களுடன் 161.53 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிவந்தார்.
அப்போது 19வது ஓவர், கடைசி ஓவரில் தோனி எத்தனை சிக்சர் அடிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில் 19வது ஓவரின் கடைசி பந்தை நடராஜன் யார்க்கர் வீச முயற்சி செய்ய அது தாழ்வான ஒரு ஃபுல்டாஸ் பந்தாக மாறியது. அதை தோனி எக்ஸ்ட்ரா கவர் மேல் தூக்கி அடிக்க நினைத்தார், ஆனால் மட்டையின் முன் விளிம்பில் பட்டு கேன் வில்லியம்சனிடம் கேட்ச் ஆனது.
இதற்கு முன்னால் தோனி இவரை ஒரு மிகப்பெரிய சிக்சரை அடித்தார். இதற்கும் முன்னால் சந்தீப் சர்மா காட் அண்ட் பவுல்டு வாய்ப்பை தோனிக்கு விட்டார், ஒருவேளை அவர் அந்தக் கேட்சைப்பிடித்திருந்தால் நடராஜனுக்கு தோனி விக்கெட்டை வீழ்த்த வாய்ப்பில்லாது போயிருந்திருக்கும்.
பிரைஸ் விக்கெட் என்பார்களே அந்த தோனி விக்கெட்டை நடராஜன் கைப்பற்றினார். இதில் தற்செயல் என்னவெனில் நடராஜனும், அஸ்வினும்., அஸ்வினின் யூடியூப் சேனலில் 3 நாட்களுக்கு முன்னர்தான் மனம் விட்டு உரையாடினர். இருவரும் பலவிஷயங்களை மிகவும் நெருங்கிய நட்பு ரீதியாக அளவளாவினர்.
அப்போது அஸ்வின், நடராஜனிடம் கேள்வி ஒன்றை வைத்தார், ‘ஒருத்தரோட விக்கெட்டை எடுத்தா அதை சாதனையா நினைப்பேன்னு எந்த விக்கெட்டைச் சொல்லுவ?’ என்றார் அஸ்வின். அதற்கு நடராஜன் தோனி என்றார். அதாவது தோனி விக்கெட்டை வீழ்த்துவதை சாதனையாக நினைப்பேன் என்று சொன்னார் நடராஜன், நேற்று சொன்னதைச் செய்தார்.
நடராஜனின் இந்தப் பேட்டியையும் அவர் தோனியை வீழ்த்தியதையும் பாராட்டி நெட்டிசன்கள் மீம்களையும் பதிவுகளையும் இட்டு ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.