

ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய நியூஸிலாந்து அணியோடு ஒப்பிடுகையில், இப்போது ஒரேயொரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. நீல் வாக்னருக்குப் பதிலாக ஜேம்ஸ் நீஷம் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய ஆல்ரவுண்டரான நீஷம், தனது முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் சதமடித்தது குறிப்பிடத்தக்கது. நீஷமின் வருகை பேட்டிங்கிற்கு மட்டுமின்றி வேகப்பந்து வீச்சுக்கும் பலம் சேர்ப்பதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் முடிவடைந்த தென் ஆப்பிரிக்க தொடரின்போது ஓய்வளிக்கப்பட்டிருந்த கேப்டன் பிரெடன் மெக்கல்லம், வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர். காயத்திலிருந்து மீண்டுள்ள ராஸ் டெய்லர், டிரென்ட் போல்ட், கோரே ஆண்டர்சன் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
அணி விவரம்:
பிரென்டன் மெக்கல்லம் (கேப்டன்), கோரே ஆண்டர்சன், டிரென்ட் போல்ட், டக் பிரேஸ்வெல், மார்க் கிரேக், மார்ட்டின் கப்டில், மட் ஹென்றி, டாம் லேத்தம், ஜேம்ஸ் நீஷம், லியூக் ரோஞ்சி, ஹாமிஷ் ரூதர்போர்டு, டிம் சவுதி, ராஸ் டெய்லர், வாட்லிங், கேன் வில்லியம்சன்.